பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சுந்தர சண்முகனார்


"உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லணையவும் அன்னவாம்"
(பழவினை-4)

என்னும் பாடல் ஒப்புநோக்கத் தக்கது.

வேங்கடவன் கோலம்

வேங்கட மலையின் உச்சியில், ஒரு பக்கம் தெரியும் ஞாயிற்றுக்கும் மற்றொரு பக்கம் தெரியும் திங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில், நீலநிற முகில், மின்னலாகிய புதுப் பொன்னாடை உடுத்து, இந்திரவில்லாகிய அணிகலனைப் பூண்டு நின்றாற் போல், திருமால் ஒருகையில் ஆழியும் (சக்கரமும்) மற்றொரு கையில் வெண் சங்கும் ஏந்தி, மார்பிலே ஆரம் அணிந்து, பூவாடை போர்த்துப் பொலிவுடன் நின்றகோலத்தில் உள்ளாராம் - என்று மாங்காட்டு மறையவன் கோவலனிடம் கூறினான்.

"வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக் கோடிஉடுத்து விளங்குவில் பூண்டு
கன்னிற மேகம் கின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாம்ரைக் கையின் ஏந்தி
கலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"
(11:41-51)

இது பாடல் பகுதி. பரிபாடலிலும் இது கூறப்பட்டுள்ளது.

"பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையால்"
(13:7.9)

இருவேறு மண்டிலம் = ஞாயிறும் திங்களுமாகும்.