பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

143


இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையிலும் ஞாயிறு - திங்கள் தோற்றம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புகார் என்னும் பெண், மாலையில் ஒரு பக்கம் வெண்தோடும் மற்றொரு பக்கம் பொன்தோடும் அணிந்திருந்தாற் போன்று, கீழ்பால் திங்களும் மேல் பால் ஞாயிறும் விளங்கின எனக்கூறப்பட்டுள்ளது.

"புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி (5:109)
குணதிசை மருங்கில் நாள்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்

வெள்ளி வெண் தோட்டோடு பொன்தோடாக"
(5:119-121)

இது பாடல் பகுதி. மாலையில் ஒரே நேரத்தில் கிழக்கே திங்களும் மேற்கே ஞாயிறும் காணப்படுவது ஆங்கிலப் பாடல் ஒன்றிலும் அறிவிக்கப் பட்டுள்ளது. லார்டு டென்னிசன் (Lord Tennyson) இயற்றிய "The Lotos Eaters" என்னும் பாடல் அது. யூலிசெஸ் (Ulysses) என்னும் கிரேக்க மன்னனின் போர் மறவர்கள், ஆசியாமைனரில் உள்ள எதிரியின் 'ட்ராய்' (Troy) என்னும் பகுதியை வென்று, தமது இதாகா (Ithaca) என்னும் பகுதிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வழியில் ஒரு தீவில் தங்கினார்களாம். அவர்கள் அத்தீவில் மாலையில் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்களாம். பாடல்:

"They sat them down upon the yellow sand

Between the sun and moon upon the shore"
(5:1,2)

என்பது பாடல் பகுதி. இளங்கோவின் சிலம்புக்கு நயம் கூட்டுவதற்காக, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் வேறு மூன்று நூற்பாடல்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.