பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

149


இது பாடல் பகுதி. மாலையைப் பகைக் குறும்பு என்றதால் வெண்பிறையை வெற்றி வேந்தனாகக் கொள்ளல் வேண்டும். மன்னர்கள் மண்ணிலேயிருந்து மக்களை ஆளுவது போல், பிறைத் திங்கள் விண்ணிலேயிருந்து விண்மீன்களை ஆள்கின்றது. மாலையைக் குறும்பாக உருவகித்துள்ளார். மாலைக் குறும்பு = ஓரிட உருவகம்.

பொய்கைப் பெண்

பொய்கையாகிய பெண் அன்னமாகிய நடையையும், ஆம்பலின் மணமாகிய நறுமணப் பொருளையும், தாமரை ஆகிய வாயையும் அறல் மணலாகிய கூந்தலையும் வண்டுகளாகிய பாணர்களின் பண்ணையும் குவளையாகிய கண்ணையும் உடைத்தாயிருக்கிறாள். பொய்கையைச் சுற்றிப் பறவைகளின் ஒலியாகிய முரசம் முழங்குகிறது.

"அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் காறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப

புள்வாய் முரசமொடு...... "
(4:72–77))

என்பது பாடல் பகுதி.

உழவு

மாடல் மறையோன் தன் நாக்காகிய ஏராலே உழுது செங்குட்டுவனின் செவியாகிய வயலிலே உயர்ந்த அறவுரையாகிய விதையை விதைத்தானாம்.

"மறையோன் மறைகா உழுது வான்பொருள்

இறையோன் செவி செறுவாக வித்தலின்"
(28:187,188.)