பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்போ சிலம்பு

13


என மதுரையார் கோமானும் வஞ்சியார் கோமானும் காவிரி நாடனும் வாழ்த்தப்பெற்றுள்ளனர். அவர்தம் நாட்டு நீர் வளமும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நீர் வந்து கொண்டே யுளதாம் (வருபுனல்) காவிரி நாடன் = சோழன்.

அம்மானை வரி

பெண்டிர் மூவர் கூடிக் காய் போட்டுப் பாடியாடும் ஒரு வகை ஆட்டம் அம்மானையாகும். முதலில் ஒருத்தி ஒரு வினா எழுப்புவாள். அதற்கு அடுத்தவள் விடை யிறுப்பாள். மூன்றாமவள் கருத்தை முடித்து வைப்பாள். வாழ்த்துப் பாக்களை அடுத்து, சோழனைப் பற்றிப்பாடும் அம்மானைப் பாடல்கள் நான்கு உள்ளன. அவற்றுள், மாதிரிக்காக முதல் பாடலை மட்டும் காண்போம்.

“வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கெயில் முன்றெரிந்த சோழன் காண் அம்மானை

சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானை” (16)

பெண்டிர் மூவரும் தமது பாடல்வரியின் இறுதியில் அம்மானை - அம்மானை எனக் கூறி யாடுவர். இவ்வாறு இன்னும் மூன்று பாடல்கள் உள்ளன. அடுத்துப் பாண்டியனிடம் செல்லலாம்.

கந்துகவரி

கந்துகம் = பந்து. வரி = பாட்டு. பந்தாடிக்கொண்டு பாடும் பாட்டு இது. இந்தப் பகுதியில் நான்கு - நான்கு வரிகள் கொண்ட மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாட்டில் உள்ள மூன்றாவது - நான்காவது அடிகளே மூன்று பாடல்களிலும் மூன்றாவது - நான்காவது அடிகளாக உள்ளன. பாடல்: