பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சுந்தர சண்முகனார்



நிற்க, - இந்தக் கால நிலைக்கு ஏற்ற கருத்து ஒன்றை இங்கே விதந்து கட்டாமல் விடுவதற்கில்லை. மாதவி வாயிலாக இளங்கோவடிகள்,

“வாழி அவள்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி”

என்று பாடியுள்ள பகுதி, நாட்டு மக்களாகிய குழந்தை கட்குத் தாயாக இருந்து எத்தனை ஊழிக் காலமாயினும் நீர் உதவிக் காக்குமாம் காவிரி. இங்கே புறநானூற்றில் உள்ள

“புனிறுதீர் குழவிக்கு இலிற்று முலைபோலச்
சுரந்த காவிரி மரங்கொள் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்”
(68:8-10)

என்னும் பாடல் பகுதியும் அம்பிகாபதி காப்பியம் - நாடு நகர் நலங்கூறு காதையில் உள்ள

“வீட்டு மக்களை விரும்பும் தாய்போல்
நாட்டு மக்களை நலமுடன் பேணி......
இயங்கும் காவிரி”
(98, 99)

என்னும் பாடல் பகுதியும் இன்ன பலவும் ஒப்புநோக்கத் தக்கன.

ஆனால், பொய்க்காது பேருதவி உய்க்கும் காவிரி, இன்று தமிழ் நாட்டுக்கு அவ்வாறு உதவ முடிகிறதா? காவிரியின் தொடக்க முதல் முடிவு வரை உள்ள பகுதிகள் சமமாக நீர் பெறும் உரிமை உடையவை என்னும் அறநெறி ஏற்கப்படின், புலவர்களின் உரைகள் பொய்யாக மாட்டா. வாழ்க காவிரி,