பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

71


கையில் வளரவில்லை. அவனைத் தவப் பயனால் வளர்த்தது கைகேயியே. மகிழ்ச்சியோடு வளர்த்த கைகேயி இராமனது முடிசூட்டிற்காக அடையும் மகிழ்ச்சியின் அளவைச் சொல்ல முடியாது - என்றனர். இதற்கு எதிர்மாறாகக் கைகேயி இராமனைக் காட்டிற்கு விரட்டி விட்டாள்.

இவ்வாறு கம்ப ராமாயணத்தில் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இவை போன்றே, சிலப்பதிகாரத்தில் காப்பிய முன்னோட்டச் சுவை எவ்வளவோ உண்டு. சில காண்பாம்:

காதலற் பிரியாமை

திருமண அரங்கிலே மணமக்களை வாழ்த்துபவர்கள், உங்கட்கு வயிற்று வலி வராமல் இருப்பதாகுக! உங்கட்குக் காச நோய் வராமல் இருப்பதாகுக! உங்கட்கு இதய நோய் வராமல் இருப்பதாகுக!- என்று வாழ்த்தினால், அது இயற்கைக்கு மாறான தீய நிமித்தம் அல்லவா? எனவே, இது போல யாரும் வாழ்த்துவதில்லை. நீங்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நீடுழி வாழ்வீராக என வாழ்த்துவதுதான் முறை - இயற்கையுமாகும்.

திருமண அரங்கில் கோவலனுடன் இருந்த கண்ணகியை நோக்கி முதிய பெண்டிர் சிலர், நீ காதலனைப் பிரியாமலும், கைகோத்த நெருங்கிய தொடர்பு தளராமலும், தீமை வராமலும் வாழ்வாயாக என வாழ்த்தினர்;

"காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்தி" (1:61-62)

என்பது பாடல் பகுதி. பின்னால் கண்ணகியும் கோவலனும் கவவுக் கை நெகிழ்ந்து பிரியப் போகிறார்கள் - தீமை வரப் போகிறது என்பதை இந்த வாழ்த்து உள்ளடக்கிக் கொண்டுள்ளது. வரலாறு முழுவதும் நடந்து முடிந்த பிறகு, ஆசிரியர் இளங்கோ இந்தக் காப்பியத்தை எழுதியூ