பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

173


துய்ப்பது போலவும், மன்மதனும் இரதியும் கலந்து இன்புறுவது போலவும், கோவலனும் கண்ணகியும் இரண்டற ஒன்றிக் கலந்து இன்பம் துய்த்தனராம். இந்த உலக இன்பம் நிலையில்லாதது; எனவே நாம் இருக்கும் போதே எவ்வளவு மிகுதியாகச் சிற்றின்பம் துய்க்க முடியுமோ - அவ்வளவும் துய்த்துவிட வேண்டும் என்று எண்ணிச் செய்தவர்கள் போல் காணப்பட்டனராம்:

"தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார்
காமர் மனைவி யெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று"

இது பாடல். பணிகள் - பாம்புகள். காமர் - மனைவி = மன்மதனும் அவன் மனைவி இரதியும். 'நிலையாமை கண்டவர் போல்' என்பது இவர்களின் வாழ்க்கையில் உண்மையாகவே பலித்து விட்டதே. காமத் துறைக்குப் பொறுப்பாளனாகச் சொல்லப்படும் மன்மதனை இங்கே இழுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ணகியின் மென்மையும் வன்மையும்

அமைதியான மென்மையின் எல்லையில் கண்ணகியைப் படிப்படியாகக் கொண்டுபோய் நிறுத்திப் பின்னர்த் திடீர்த் திருப்பமாக அவளை வன்மை உடையவளாக ஆக்கியிருப்பதும் ஒருவகைக் காப்பிய முன்னோட்டமாகும். அதாவது:

1. கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்து அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்தித் தன் குறைபாட்டைக் கூறித் தன்னைத்தானே நொந்துகொண்ட பொழுது, மாதவிக்குத் தர ஒன்றுமில்லை எனக் கோவலன் வருந்துவதாக எண்ணிக் கண்ணகி நகைமுகம் காட்டிச் சிலம்புகள் உள்ளன எடுத்துச் செல்லுங்கள் என்றாளாம்: