பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

177


இப்படியெல்லாம் மிகவும் மென்மை உடையவளாகக் கண்ணகியைப் படைத்துக்கொண்டு வந்த இளங்கோ, திடீர்த் திருப்பமாக அவளுடைய வன்முறைகளை அடுக்கிக் கொண்டு போகலானார். அதாவது, கோவலன் இறந்ததைக் கேட்டதும் அவள் ஆறாத் துயர் அடைந்து வஞ்சினம் கூறிக்கொண்டு ஊரில் அலைந்தது - பாண்டியனிடம் அவன் இறக்கும் அளவுக்குக் கடுமையாகப் பேசி வழக்குரைத்தது - மதுரையை எரியூட்டியது - தனியாக வழி கடந்து சேரநாட்டு எல்லையை அடைந்து இறுதி எய்தியது - என்பன அவள் ஆற்றிய வன்முறைகள்.

கோவலனது இறப்புக்கு முன்னர்க் கண்ணகி கைக் கொண்ட செயல்கள், கோவலனது முடிவுக்குப் பின்னர்க் கண்ணகி கடைப்பிடித்த வன்செயல்கட்கு முன்னோட்டமாக அமைந்திருப்பதை அறியலாம்.

மற்றும் ஒன்று கவுந்தி, கோவலன் கண்ணகி ஆகிய மூவரும் வழியில் ஐயை கோட்டத்தில் தங்கியிருந்தபோது, தெய்வம் ஏறிய சாலினி கண்ணகியைக் குறிப்பிட்டு,

"இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமாமணி..." (12:47-50)

என்று கூறினாள். இதுவும் ஒருவகை முன்னோட்டமே. இறுதியில் கண்ணகி குடமலை நாடாகிய சேரநாட்டுப் பகுதியிலே சென்று இறுதி எய்தியதும், அங்கே அவளுக்குக் கோயில் எடுத்ததும், தமிழ்ப் பாவையானதும், உலகினரால் (பல நாட்டினரால்) அவரவர் இடத்தில் கோயில் எடுத்து வழிபடப்பட்டதும் பின்னால் நடந்ததை முன்னாலேயே குறிப்பாக அறிவிப்பது போல் சாலினியின் உரை இருக்கிறதல்லவா?