பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

191


செடி கொடிகள் அடர்ந்த காட்டரண் இருந்தன. நரிகள் இருப்பது காட்டில் ஆதலால், நொச்சி ஒரு புடை என்பது, மதில் அரணுக்கு அப்பால் உள்ள காட்டைக் குறிப்பதாயிற்று.

இந்தப் பகுதியில் கொள்ள வேண்டியது. தாழ்த்திப் பேசியவர்களைப் பொறுத்தருளிப் பழைய உருவம் பெறச் செய்யுமாறு கவுந்தியடிகளை வேண்டிய கோவலனுடைய பண்புடைமை - அதாவது - பிறர் குற்றம் பொறுத்தல் - பிறருடைய துன்பத்தைப் பொறுக்க முடியாமை - அயலாரிடத்தும் இரக்கமும் அன்பும் செலுத்துதல் முதலிய பண்புடைமை கோவலனது பெருமைக்குச் சான்றாக உள்ளமையை அறிதலாகும்.

ஊர் காண் காதை

குற்றம் ஒப்புதல்

பலர் தாம் செய்த பிழையை ஒத்துக்கொள்ளாமல் சரியே என்பர். தமது குற்றத்தை உணர்ந்து ஒத்துக் கொள்பவர் மிகவும் சிலரேயாவர் - இவர்களுள் கோவலனும் ஒருவன். மதுரையின் புறஞ்சேரிப் பகுதியிலே மூவரும் இருந்தபோது, கோவலன் கவுந்தியடிகளிடம் தனது குறைபாட்டை - தனது தவறைக் கூறி வருந்துகிறான்.

தவசியாம் அடிகளே! நான் இதற்குமுன், செல்ல வேண்டிய வழியில் செல்லாமல் தீய வழியில் ஒழுகி இளமையையும் செல்வத்தையும் நிலையாமை உடையனவாக்கினேன். மெல்லிய மேனியுடைய கண்ணகியைக் கடிய கொடிய நெடிய வழியில் நடக்கச் செய்து துன்பப்படுத்தினேன். முன்பின் அறியாத இடத்திற்கு அழைத்து வந்து அருந்துயருக்கு வழிப்பாதை யமைத்துச் சிறுமை படைந்தேன் என்று கூறி நோகிறான்.