பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

199


நிறுவனத்தை வற்றச் செய்திருக்கலாம். வீட்டிலிருந்து கொண்டுவரவும் செய்திருக்கலாம்.

கோவலனிடத்தில் பொருள்பெற வந்தவருள் அகவை முதிர்ந்த அந்தணன் ஒருவன், தளர்ந்த நடையுடன் கோலையே காலாக ஊன்றி (தண்டு கால் ஊன்றி) வளைந்த கூன் உடம்புடன் வந்து கொண்டிருந்தான். மதம் பிடித்த யானை ஒன்று அவனைத் துதிக்கையால் வளைத்து எடுத்துக் கொல்லப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட கோவலன், உடனே யானைமீது பாய்ந்து அந்தணனைத் துதிக்கையிலிருந்து விடுவித்து அதன் பிடரித் தலைமீதமர்ந்து அடக்கினானாம். இளங்கோவடிகள் இந்தப் பகுதியைச் சுவையாக அமைத்துள்ளார். ‘ஈண்டு, கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி’ என்னும் புறநானூற்றுப் பாடல் (159) பகுதியும், ‘முக்காலுக்கு ஏகா முன்’ என்று தொடங்கும் காளமேகத்தின் தனிப் பாடலும், இன்ன பிறவும், இளங்கோவின் தண்டு கால் ஊன்றி என்னும் பகுதியோடு ஒப்புநோக்கத் தக்கன. கோவலனின் கொடையையும், அந்தணக் கிழவன் சாகக் கூடாதே என்ற அருளினால் யானையை அடக்கிய துணிவையும் அடிப்படையாகக் கொண்டு, இளங்கோ, கோவலனை,

“கடக்களிறு அடக்கிய கருணை மறவன்” (53)

என்று சுட்டிக் கூறியுள்ளார்.

வீரன் என்னும் வடசொல்லுக்கு நேராக ‘மறவன்’ எனத் தமிழில் மொழி பெயர்த்த இளங்கோ, கருணை என்னும் வடசொல்லுக்கு நேராக ‘அருள்’ என்னும் தமிழ்ச் சொல்லைத் தர மறந்துவிட்டார். தொல்காப்பியர் வீரம் என்பதைப் ‘பெருமிதம்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். பெருமிதம் நான்கு வகைப்படும் எனப் பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். அதாவது: கல்வியால்