பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

209


இன்னமும் செய்வாள் - என்னவும் செய்வாள் எனக் கருதி மடலை வாங்க மறுத்துவிட்டான் கோவலன். மறுப்பை யறிந்த மாதவி சொல்லொணாத் துயர் உழந்தாள். இந்தச் செய்தி வேனில் காதையில் உள்ளது.

பண்டு மடல்களில் எழுதியதால்தான் கடிதத்திற்கு ‘மடல்’ என்னும் ஒரு பெயர் தரப்பட்டது போலும்.

இரண்டாவது மடலாவது:-

கோவலன் நடு வழியில் ஒரு நாள் காலையில், ஒழுக்கம் வழுவிய பார்ப்பனர் இருக்கும் பகுதியில் கவுந்தியையும் கண்ணகியையும் தங்கச் செய்து, தான் காலைக்கடன் முடிப்பதற்காக ஒரு நீர்க்கரையை அடைந்தான். அவ் வேளையில், மாதவி தந்த மடலை எடுத்துக் கொண்டு கோசிகன் என்னும் பார்ப்பனன் பல இடங்களிலும் கோவலனைத் தேடிக் காண முடியாமல் இவ்விடத்தை அடைந்தான். கோவலன் அப்பக்கம் இருப்பதை, பல இடங்களிலும் தேடி அலைந்த களைப்பினால் கோசிகன் அறியவில்லை; அருகிலிருந்த ஒரு பந்தரில் மாதவி என்னும் கொடி (குருக்கத்திக் கொடி) வாடியிருப்பதைக் கண்டான். உடனே அவன், ஏ மாதவியே (குருக்கத்திக் கொடியே)! கோவலனைப் பிரிந்ததனால் வாடிக் கிடக்கின்ற மாதவி போல், நீயும் கோடை வெப்பம் தாங்க முடியாமல் வாடியுள்ளாயோ, என்று ஒரு பேச்சுக்குச் சொன்னான். இது கோவலனின் செவிக்கு எட்டியது. உடனே கோவலன் கோசிகனிடம் விவரம் கேட்டான். கோசிகன் கூறலானான்.

ஐயனே! உன்னைப் பிரிந்த உன் பெற்றோர்கள் அருமனி இழந்த நாகம் போலவும் உயிரை இழந்த உடல் போலவும் பொலிவற்றுக் கிடக்கின்றனர். உன் சுற்றத்தார்கள் துன்பக் கடலில் தோய்ந்து தவிக்கின்றனர். உன் தந்தை உன்னைத்