பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

215


வருபனி கரந்த கண்ண னாகிப்
பல்லான் கோவலர் இல்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகில் செல்வோன்”

(கொலைக் களக் காதை 91-99)

என்பது பாடல் பகுதி, ஆற்றாமை காரணமாகக் கோவலன் கண்ணகியை ஒருங்குடன் - அதாவது - மார்போடு இறுக அணைத்துத் தழுவிக் கொண்டானாம். குடி முதல் சுற்றத்தார், குற்றிளையோர், அடியோர் பாங்கினர், ஆயத்தார் முதலியோருடன் இருந்த கண்ணகியை இப்போது தனியே விட்டுச் செல்வதாக உள்ளம் வெதும்பி உருகினானாம். கண்ணீரைக் கண்ணகி கண்டால் மிகவும் வருந்துவாள் என்பதற்காக, என்னவோ துடைப்பவன் போல் துடைத்து மறைத்தானாம். வல்லா நடையின் - அதாவது - நடக்க முடியாத தள்ளாட்டத்துடன் தெருவில் சென்றானாம்.

கண்ணகியைத் தனியாய் விட்டுச் சென்றான் என்பதில் ஒரு கருத்து மறைந்துள்ளது. இப்போது மட்டும் அன்று - இனியும் அவள் தனியாயிருக்கச் செய்து விட்டான் - மீண்டும் அவள் கோவலனோடோ அல்லது - அவர்களுடைய சுற்றத்தாரோடு கூடப்போவதில்லை - என்னும் கருத்து இதில் மறைந்து கிடக்கின்றதல்லவா?

கோவலன் குழப்பம்

கோவலன் கண்ணகியை விட்டு மாதவிபால் தாவினான். மாதவியின் கானல் வரிப்பாட்டைக் கேட்டு, அவள் வேறொருவன் மேல் காதல் கொண்டுள்ளாள் எனக் குழப்பம் எய்தி அவளைப் பிரிகிறான். கோவலன் இன்னொருத்தியிடம் உள்ளம் செலுத்தியிருப்பது போன்ற குறிப்பு புலப்படும் பாடலைப் பாடியதால், மாதவியும் இன்னொருவன் மீது எண்ணம் கொண்டவள் போல் பாடினாள். இருவர்