பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சுந்தர சண்முகனார்


பாடியனவும் உண்மையானவையல்ல. விளையாட்டாகப் பாடியவையே. ஆனால் விளையாட்டு வினையாயிற்று. முன்னர் இந்திர விழாவில் மாதவி ஆடல் பாடல் செய்ததையே பிடிக்காமல் வெறுத்தவன் கோவலன்.

இதில் ஆண்மையின் ஆட்சி புலப்படுகின்றது. ஆடவன் எத்தனைப் பெண்கள் மேலும் விருப்பம் கொள்ளலாம்; ஆணுக்குக் கற்பு தேவையில்லை. ஆனால், பெண் ஒருவனைத்தவிர இன்னொருவனை நினைக்கவும் கூடாது; பெண்ணுக்குக் கற்பு இன்றியமையாதது - என்ற கொள்கை - அதாவது - ஆண் ஆட்சிக் கொள்கை புலப்படுகிறது. கோவலனது குழப்பம் ஆண் ஆட்சியின் அடிப்படையில் ஏற்பட்டதே.

உண்மையிலேயே மாதவிக்கு மாற்றான் எவன்மீதும் எண்ணம் இல்லை என்பதற்குத் தக்க சான்று நூலிலேயே உள்ளது. கோவலன் பிரிந்து சென்ற பின்னர், தோழி வயந்த மாலை வாயிலாக மடல் எழுதிக் கோவலனுக்குக் கிடைக்கச் செய்ததே தக்க சான்றாகும். ஆண் ஆட்சியின் காரணமாகக் கோவலன் மடல் பெற மறுத்து விட்டான். இது கடைத் தெருவிலேயே (கூல மறுகில்) நடைபெற்ற மானக்கேடு.

கோவலன் மாதவியை நம்பாமை தகாதெனினும், அவன் கண்ணகியை அடைய இது வழி வகுத்துக் கொடுத்தது. ஆனால் கண்ணகியை அடைந்தமை, நன்மைக்குப் பதிலாக இறக்கும் அளவுக்குத் தீயதாய் முடிந்தது இரங்கத்தக்கது. எதிரதை யாரறிவார்!

கோவலனின் குறைபாடுகள்

கோவலன் பற்பல அறச்செயல்கள் புரிந்திருப்பினும், கலைகளில் ஆர்வமும் பயிற்சியும் உடையவனாய்