பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

சுந்தர சண்முகனார்


இந்த முறையிலே மாநாய்கன்-மாசாத்துவான் என்னும் பெயர்கள் குலப்பெயரைக் குறிப்பனவாக இருக்கலாமோ! குலப்பெயர் எனில், இரண்டு பெயர்களுள் ஏதாவது ஒன்று தானே இருக்க முடியும்? இங்கே இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளனவே என்று கேட்கலாம். ஒரு குலத்தாருக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட பட்டப் பெயர்கள் இருப்பதுண்டு. எடுத்துக்காட்டுகள்: உறவினர்கட்குள்ளேயே, முதலியார் - செட்டியார் என்ற பட்டப்பெயர்கள் உண்டு. உறவினர்கட்குள்ளேயே கவுண்டர், நாயகர், படையாட்சி என்ற பட்டப் பெயர்கள் உண்டு. முக்குலத்தாரிடையே பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. இதுபோல, கண்ணகி - கோவலன் - இவர்களின் உறவினர்கட்குள்ளேயே மாநாய்கன், மாசாத்துவான் என்னும் பட்டப் பெயர்கள் இருக்கலாம். அங்ஙனமெனில், நாய்கன் - சாத்துவான் என்பன போதுமே - ‘மா’ என்னும் சிறப்பு அடைமொழி சேர்த்து மாநாய்கன் - மாசாத்துவான் என்றது ஏன் எனில், இன்றைய உலகியலில் பெரிய பண்ணை, பெரிய கம்பத்தம், பெரிய இடம், பெரிய தனக்காரர் என்பவற்றில் உள்ள ‘பெரிய’ என்பது போல ‘மா’ என்பதைக் கொள்ளலாம்.

இங்கே இத்தகைய குழப்பமான ஐயத்திற்கு இடமான சூழ்நிலை எனக்கு ஏற்பட்டதற்கு உரிய காரணமாவது: இரண்டு பெயர்களிலும் ‘மா’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையான பெயர்களுக்கு உரியதா - அல்லது இருவரும் சமமானவர்கள் என்று அறிவிப்பதற்காகச் செயற்கையாகச் சேர்க்கப்பட்ட அடை மொழியா என்ற ஐயக் குழப்பம் ஏற்பட்டதே. மற்றும், தெருக் கூத்துக் கதையில் கோவலனின் தந்தை பெயர் மாணாக்கன் (மாநாய்கன்) என்றும், கண்ணகியின் தந்தை பெயர் மாச்சோட்டான் (மாசாத்துவான்) என்றும் பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன. பெயர்களின்