பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

சுந்தர சண்முகனார்


மாலையை அணிவித்தது ஏன்? அந்த முத்து மாலையோடு இடையில் ஏதேனும் தொடர்பு (பேரம்) இவர்கட்கு உண்டா? உனது இடை வருந்த இவ்வளவு அணிகலன் ஏன்? என்று வினவிப் பாராட்டுகிறான். (62-72)

“பிணையேர் மடநோக்கும் காணும் உடையாட்கு

அணிஎவனோ ஏதில தந்து” (1089)

என்னும் திருக்குறள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மலர் மாலையோடும் முத்து மாலையோடும் தோழியர்க்கு ஏதேனும் தொடர்பு உண்டா? - என்று கேட்பது போன்ற அமைப்பு, புதிய முறையில் சுவை பயக்கின்றது. மேலும் பின்வருமாறு விளித்துப் பாராட்டுகிறான்:

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே” (2:73, 74)

என்றான். இதில் ஐம்பொறிகளின் தூண்டல் துலங்கல் குறிப்பாய் அமைந்துள்ளன. பொன் கண்ணுக்கு இனியது. வலம்புரி முத்து, உடம்பின் உறுப்புகளில் படும்போது வழவழப்பாக மென்மையாயிருந்து தொடுபுலனாகிய ஊற்றின்பம் அளிக்கிறது. காசறு விரை எனப்படும் நறுமணப் பொருள் மூக்கின் வாசிலாக நறுமண இன்பம் துய்க்கச் செய்கின்றது. கரும்பு = நாக்கிற்கு (வாய்க்கு) இனிப்புச் சுவை நல்குகிறது. பெண்கட்குத் ‘தேன்மொழி’ என்னும் பெயர் இருப்பதற்கு ஏற்ப, தேன் மொழி இன்பம் தருகிறது இவ்வாறாக, ஐம்பொறி புலன்கட்கும் இன்பம் தருகிறது. இவ்வாறாக, ஐம்பொறி - புலன்கட்கும் இன்பம் அளிக்கத் தக்கவளாய்க் கண்ணகி உள்ளாளாம். ஈண்டு,

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள்” (1101)

என்னும் குறள் ஒப்புநோக்கத் தக்கது.

பாராட்டு மேலும் தொடர்கிறது: