பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

241


“என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்”(137-144)

காலடியை மண்மகள் அறியாள் என்றால், கண்ணகி வீட்டை விட்டு வெளியில் நடந்தறியாள் - வெளியில் செல்ல வேண்டுமாயின் ஊர்தியில் செல்வாள் - என்பது கருத்து. இதனால், கண்ணகியின் மென்மையும் செல்வ வளமும் அறிவிக்கப்பட்டன.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (56)

என்பது திருக்குறள். இதன்படி, கண்ணகி தன்னைக் கொண்டவனாகிய கோவலனின் நன்மையைப் பேணினாள்; ஆனால் தன்னைக் காத்துக் கொள்ளவில்லை. கணவனுக்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுத்தாள். மனைவிக்கு வள்ளுவனார் ‘வாழ்க்கைத் துணை’ என்ற பெயர் கொடுத்துள்ளார். இதைத்தான் இளங்கோ ‘இன் துணை’ என இங்கே கூறியுள்ளார். ‘மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம் என்பதில் உள்ள இன்றியமையா’ என்னும் வழக்காறு இன்றியமையாதது. அதாவது முக்கியமான என்னும் வடசொல்லின் பொருளில் இது உள்ளது. இந்தியில், முதலமைச்சரை முக்கிய மந்திரி என்று கூறுகின்றனர். தனித் தமிழாளர்கள் முக்கியம் என்பதற்கு இன்றியமையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இதை இளங்கோ அடிகளும் இங்கே கற்றுத் தந்துள்ளார்.