பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

சுந்தர சண்முகனார்


செய்துள்ளாள். இதில் ஒரு பொருத்தம் உள்ளது. ஐயை-மாதரி ஆயர் குடியினர்; ஆ (பசு) காத்து ஓம்புபவர்; அவர்க ளிடத்தில் வைக்கோல் நிரம்ப இருக்கும். அதனால் வைக்கோலின் உதவியால் நெருப்பு பற்றச் செய்யப்பட்டது.

‘காதலற்கு ஆக்கி’ என்னும் பகுதியும் சுவைக்கத்தக்கது. அவள் தனக்காக ஆக்கவில்லை; தன் காதலன் கோவலனுக்காக ஆக்கினாளாம். கணவனுக்குத் தன் கையாலேயே ஆக்கவேண்டுமெனத் தானே ஆக்கினாள். தனக்குத் தெரிந்தவரையும் ஆக்கினாள்.

உணவு ஆக்கி முடிந்த பின், மாதரி வீட்டார் தந்த வேலைப்பாடு மிக்க ஒரு பனந் தடுக்கில் கண்ணகி கோவலனை அமரச் செய்தாள்; ஒரு மண்பாண்டத்தில் நீர் கொண்டு வந்து கணவரின் காலடிகளைத் தடவித் தூய்மை செய்தாள். பின்னர் அவன் எதிரில் தரையில் தண்ணீர் தெளித்துத் தடவி, குமரி வாழையின் குருத்து இலையை விரித்துப் போட்டு உணவு படைத்து அடிகளே உண்பீர்களாக என்று கூறி உண்பித்தாள்:

“தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடிநிர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு

அமுதம் உண்க அடிகள் ஈங்கென” (35-43)

என்பது பாடல் பகுதி. “தால......தவிசு” – கைதேர்ந்த பெண் பின்னிய பனையோலைத் தடுக்கு. அந்தக் காலத்திலேயே, பெண்கள் சிறு குடிசைத் தொழிலாகத் தடுக்கு பின்னி வந்தனர் என்பது தெளிவு. கணவன் கால்களைக்