பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

சுந்தர சண்முகனார்


அகப்பையும் போட்டிருந்தார்கள் - ஆனால் காய்கறிகள் அகப்பைக்கும் எட்டவில்லை - அவ்வளவு பெரிய இலை. அதனால், யான் எழுந்துபோய் எழுந்துபோய்க் காய்கறிகளை எடுத்துக்கொண்டு வந்து உண்டேன் என்றாராம். இலையைக் கொண்டு விருந்தின் தரத்தைக் கணிக்க உதவும் கதையாகும் இது. எனவேதான், கோவலனுக்குக் குமரிக் குருத்துத் தலைவாழை இலை போடப்பட்டது. மாதரி வீட்டார் பெரிய இலை தந்திருந்தனர்.

கண்ணகி எல்லாம் முறையாகச் செய்து கணவனை நோக்கி அடிகளே அமுதம் உண்க என வேண்டினாள். அந்தக் கால நாடகத்தில் - அதாவது வடமொழி வழக்கு தமிழகத்தில் மலியத் தொடங்கிய காலத்து நாடகத்தில், மனைவி கணவனைப் பிரபோ - பிராண நாயகா என்று அழைப்பாள். இந்தக் கால நாடகத்தில் ‘அத்தான்’ என்கிறாள். ஆனால், கண்ணகி, ‘அடிகள்’ என்னும் மிக உயர்ந்த சொல்லால் குறிப்பிட்டுள்ளாள். ‘உண்க’ என்பது வேண்டிக் கோடல் பொருளில் வந்த வியங்கோள் வினை முற்று. கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை இதுதான்.

இங்கே, பெரிய புராணத்திலுள்ள செய்தி ஒன்று நினைவிற்கு வருகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருக்கு உணவு படைப்பதற்காகத் தம் மூத்த மகனாகிய மூத்த திருநாவுக்கரசு என்னும் பெயர் உடையவனை அழைத்து நீ போய், பொன்னிறமான வாழைக் குருத்து இலையை அறுத்துக்கொண்டு வருக என்றார். தன்னை அரவம் தீண்டியதைப் பொருட்படுத்தாமல் அவன் கொய்த குருத்து இலையைக் கொண்டு வந்தானாம். இதனைப் பெரிய புராணம் - அப்பூதி அடிகள் வரலாற்றுப் பகுதியில் உள்ள -

“தூயாற் கறிகளான அறுவகைச் சுவையால் ஆக்கி

ஆயஇன் அமுதும்ஆக்கி அமுதுசெய் தருளத் தங்கள்