பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

சுந்தர சண்முகனார்


சிரிப்பில் என் உள நோயும் துன்பமும் மறைந்திருப்பதை அவர்கள் அறிந்து உள் மனம் வருந்தினர். இந்த நிலை ஏற்படும்படிச் செய்துவிட்டீர்களே என்பதுதான் எனது கவலை. யான் உம்மிடத்தில் சிறிதும் மாறுதல் கொள்ளாத உள்ளம் உண்மையான பற்றுள்ளம் கொண்டவள் ஆதலின், வருக என நீங்கள் கூறியதும் வந்துவிட்டேன் - எனக் கண்ணகி நயவுரை மொழிந்தாள்:

“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை கில்லா முனிவு இகந்தனனா
அற்புளம் சிறந்தாங்கு அருள்மொழி அளைஇ
எற்பாராட்ட யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாய்அல் முறுவற்கு அவர்உள் ளகம்வருந்தப்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்

ஏற்றெழுந் தனன்யான் எள்று அவள்கூற” (71-83)

என்பது பாடல் பகுதி. கண்ணகி தன்னலம் இழந்ததற்காக வருந்தவில்லை - பிறர் நலம் புரிய முடியாது போனமைக்காகவே வருந்தியுள்ளாள்.

உலகியல்

இதுபோன்ற சூழ்நிலையில் உலகியலில் என்னென்னவோ நடந்திருக்கலாம். கோவலனின் பெற்றோர்கள், என் மகன் இந்த மூதேவி கண்ணகியைத் தொட்டதுமே அவனைச் சனியன் பிடித்துக்கொண்டது. இவளை எந்த நேரத்தில் தொட்டானோ? இவள் மூஞ்சைப் பாரேன் - ஏன், இவள் தாய் வீட்டில் போய் இருப்பதுதானே? என்று சொல்லலாம்.