பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

255


கதைக்குக் கால் இல்லை - தலை இல்லை என்பர். அவ்வாறே, சிலப்பதிகாரக் கதைச் செய்தி முழுவதையும் நம்புவதற்கு இல்லை. இடப்பக்க மார்பைத் திருகி எறிந்தால் ஊர் எரியாது. கண்ணகிபால் பரிவு கொண்டவர்கள், கோவலன் கொலையுண்டதற்குக் காரணமான பொற் கொல்லன் இருந்த பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கலாமோ - என்னவோ - எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. குற்றம் பெரியதுதான் - அதற்காக ஊரைக் கொளுத்துவது என்பது பொருந்தாது. கண்ணகியை மறக் கடவுளாக ஆக்கப் புனைந்த கற்பனையாகவும் இருக்கலாம் இது.

கண்ணகியின் குறைபாடு

இதுகாறும் கண்ணகியின் சிறப்புகள் - உயரிய பண்புகள் விளக்கப்பட்டன. கண்ணகியின் குறைபாட்டையும் கருதாமல் இருக்க முடியாது. கணவன் மாதவிபால் செல்லாமல் - சென்றாலும் அங்கேயே தொடர்ந்து நீண்ட நாள் தங்காமல் இருக்கும்படியாக அவனை ஈர்க்கும் ஆற்றல் கண்ணகியிடம் இல்லை.

சிலர் காலையில் தம் வீட்டுச் சிற்றுண்டி பிடிக்காமல், உணவுக் கடைக்குச் சென்று, இட்டலி, வடை, பூரி, கிழங்கு, பொங்கல், சாம்பார், சட்னி, கடப்பா, அடை கறி முதலியவற்றை மேய்வார்கள். கோவலனின் செயலும் இது போன்றதே. மாரியம்மன் கோலம் புனைந்த பெண்ணைப் போல் கண்ணகி இருந்திருப்பாள் போலும் கவர்ச்சியை விரும்பிய கோவலன், மாதவியின் ஆடல் பாடல்களிலும், தளுக்கு - குலுக்கு - மினுக்குகளிலும் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டான். அந்தோ! கண்ணகியின் வாழ்வு இதனால் சீரழிந்தது.

மற்றும் ஒரு குறை கூறப்படுகிறது சிலரால். மாதவியை விட்டுக் கோவலன் தன்னிடம் வந்ததும், கண்ணகி ஊடல்