பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

சுந்தர சண்முகனார்


பழமொழி. எனவே, இந்த அச்சம் கண்ணகிக்கு உண்டானது இயற்கையே. மற்றும், பிறர்க்குத் தெரிந்தால் போவதைத் தடுத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும் தெரியாமல் கணவனுடன் புறப்பட்டு விட்டாள்.

எனவே, கண்ணகி கணவனோடு ஊடாமலும் உடன் வர மறுக்காமலும் செயல்பட்டதைக் கண்ணகியின் குறைபாடாகக் கூறுவதற்கு இல்லை. ஒரு தடவைதான் ‘கோட்டை’ விட்டு விட்டாள் - மறுபடியும் ஏமாறுவாளா என்ன! ஆனால் பின்பு மதுரையில் நேர்ந்ததை அவள் முன் கூட்டி அறிய முடியுமா என்ன! அது தற்செயலாய் நேர்ந்ததாகும். இயற்கையின் கட்டளைக்கு அவள் பொறுப்பாகாள்.

ஆனால், தொடக்கத்தில் கணவன் மாதவியால் செல்லாமல் இருக்கச் செய்ய அவளால் இயலாது போனது வருந்தத்தக்கதே. கண்ணகி எவ்வளவோ முயன்றும் இருக்கலாம். ஆனால் கோவலன் முரட்டுத்தனமாய்த் திருந்தாமலும் இருந்திருக்கலாம் அல்லவா?