பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!


பயணப் பொருத்தம்

கணவனும் மனைவியுமான் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஆக இருவர் மட்டும் நெடுந்தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பானதன்று. தேன் நிலவுக்குச் செல்வதை இங்கே எடுத்துக் கொள்ளக் கூடாது. வெளிப்படையாகவே சொல்லலாம் என எண்ணுகிறேன். பெண் வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்க வேண்டுமெனில், அவளுடன் ஆடவன் துணை போதல் நமது மரபு அன்று - ஒரு பெண் அவளுடன் துணை போவதே பொருத்தமானது. அதற்கு ஏற்பப் பெண் கவுந்தி கிடைத்தார். மற்றும், கணவன் அப்பால் சென்று ஒரு செயல் முடித்துவர, மனைவிக்கு ஒரு பெண்ணைத் துணையாக விட்டுச் செல்வதே மரபும் பொருத்தமும் ஆகும். இதன்படி, வழியில், கோவலன் நீர் அருந்த ஒரு முறையும், காலைக் கடன் கழிக்க ஒரு முறையும் கண்ணகியை கவுந்தியோடு விட்டுச் சென்றதாகச் சிலம்பு சொல்கிறது. கோவலன் கால்களைத் தொட்டுக் கும்பிடும் அளவுக்குப் பெருமையும் அகவையும் (வயது முதிர்வும்) உடைய கவுந்தியுடன் ஒரு பெண்ணை வழி நடத்திச் செல்வது தக்க வாய்ப்பாகும். எனவே, இம்மூவரும் சேர்ந்து செய்யும் பயணம் பொருத்தமானதும், பயனுள்ளதும், பாதுகாப்பானதும் ஆகும்.

கவுந்தியின் சீற்றம்

மதுரை செல்லும் வழியில் மூவரும் ஒரு சோலையில் தங்கியிருந்தபோது, இழிமகன் ஒருவனும் பரத்தை ஒருத்தியும் வந்து, கவுந்தியிடம் கண்ணகியையும் கோவலனையும் சுட்டிக்காட்டி இவர்கள் யார் என்றனர். என் மக்கள் எனக் கவுந்தி கூறினார். உன் மக்கள் எனில், தமையனும் தங்கையும் கணவன் மனைவியாக ஆவதுண்டோ என எள்ளி நகையாடினர். அவர்கள் மேல் சீற்றம் கொண்ட கவுந்தி அவர்களை நரியாகும்படிச் செய்தார். பின்பு,