பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

சுந்தர சண்முகனார்


டிருக்கும் நீ எவ்வளவோ கொடுத்து வைத்துள்ளதாகவே தெரிகிறது. எனவே, வருந்தற்க எனக் கவர்ச்சியாகவும் திறமையாகவும் பேசி ஆறுதல் செய்தார்.

கவுந்தியின் கவர்ச்சி மொழியான மற்றொன்றையும் காணலாம். மதுரையின் புறஞ்சேரியில் இயக்கிக்குப் பால் படையல் செய்து திரும்பிய வழியில் மாதரி கவுந்தியைக் கண்டு வழிபட்டாள். அப்போது, கோவலனையும் கண்ணகியையும் புறஞ்சேரியை விட்டு இருட்டுவதற்குள் மதுரைக்கு அனுப்பி வைத்துவிட வேண்டுமென்று எண்ணினார் கவுந்தி. இவர்களை எப்படி அனுப்புவது? - யாருடன் அனுப்புவது? - எங்கே தங்கவைப்பது? - என்றெல்லாம் கவலை கொண்டிருந்த கவுந்திக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தீங்கு இல்லாத ஆ காத்து ஓம்பும் தொழில் புரியும் இந்த ஆயர் குல மடந்தையாகிய மாதரி அடைக்கலப் பொருளை ஏற்பதற்குத் தகுதியானவள் எனத் திறமையுடன் தேர்ந்தெடுத்தார். தேர்வு சரியே. கவுந்தி மாதரியிடம் கூறுகிறார்:

மாதரியே! இங்கே உள்ள இருவரும் வணிக குலத்தார்கள். கோவலன்-கண்ணகி என்பன இவர்களின் பெயர்கள். கோவலனின் தந்தை மாசாத்துவான் என்பவர் புகாரிலே மிகப் பெரிய செல்வராவார். இவரது புகழ் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதுரைக்காரர்கள் இவரை நன்கறிவர். இந்த மாசாத்துவானின் மகன்தான் கோவலன் என்பதை மதுரை வணிகர்கள் அறியின், பெறுதற்கு அரிய புதையல் பெற்றவர்போல் மகிழ்ந்து இவர்கட்கு விருந்தோம்பி நல்ல மாளிகையில் தங்கச் செய்வர். அந்த வணிக குலத்தாரின் இருப்பிடத்தை இவர்கள் அடையும் வரையும், இடைக்குல மடந்தையாகிய உன்னிடம் இவர்களை அடைக்கலமாகத் தருகிறேன் - ஏற்றுக் கொள்க - என்று கவுந்தி கூறினார். பாடல்: (அடைக்கலக் காதை)