பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

சுந்தர சண்முகனார்


ஒரு கருவிரல் குரங்குக் கையோடு வானவன் ஒருவன் தோன்றினான். அவனது வரலாற்றைச் சாவகர்கள் வினவச் சாரணர் கூறலானார்:

எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் என்பவன் மனைவி வந்தவர்க்கெல்லாம் விருந்து படைத்தாள். ஒரு நாள் ஒரு தவசி வந்தார். அவருக்கு உணவு படைத்தாள். அவர் உண்டு மிகுந்த எச்சில் உணவையும் கழுவிய நீரையும் பசியால் வாடிய ஒரு குரங்கு உட்கொண்டு சிறிது பசி ஆறி அத் தவசியை ஏக்கத்துடன் பார்த்தது. அதன்பால் இரக்கம் கொண்ட அத்தவசி, அக்குரங்கை ஒரு பிள்ளைபோல் கருதிக் காக்கும்படிச் சாயலன் மனைவியிடம் அடைக்கலம் தந்து ஏகினார். அதன்படி அவள் அக்குரங்கை நன்கு பேணி வந்தாள். அக் குரங்கு இறந்த பின் அதன் பெயரால் தானம் செய்தாள். அந்தக் குரங்கு, மத்திம நாட்டிலே வாரணவாசி என்னும் ஊரில் உத்தர கெளத்தன் என்னும் அரசனுக்கு மகனாகப் பிறந்தது. குரங்கு உருமாறிய அந்த அரச குமரன் சிறப்புடன் பல தானங்கள் செய்து முப்பத்திரண்டாம் வயதில் இறுதி எய்தித் தேவன் ஆயினான். அவனே இப்போது வந்த வானவன் ஆவான். அவன் குரங்காக இருந்தபோது அடைக்கலம் தந்து காத்த நல்வினையால் சாயலனும் அவன் மனைவியும் பேரின்ப வீடுபேறு எய்தினர். இதனால், அடைக்கலம் காத்தலின் சிறப்பை நீ அறிவாயாக. இனிக் கண்ணகியைக் கோவலனோடு விரைந்து நின் இல்லத்திற்கு அழைத்துச் செல்வாயாக என்று அறிவுறுத்தினார்.

‘இரயில் சினேகம்’ என்பார்களே - அதுபோலின்றி, வழியில் சேர்ந்த கண்ணகியையும் கோவலனையும் காக்கக் கவுந்தி மேற்கொண்ட பொறுப்புள்ள முயற்சியை கடமை உணர்வை எவ்வளவு பாராட்டினும் தகும்.