பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

271


சாரணரின் அறவுரையைக் கேட்டதும் கவுந்தியடிகள் தலைமேல் கைகுவித்துக் கொண்டு பின்வருமாறு அருகனைப் போற்றினார்: அருகனின் திருமொழிகளைத் தவிர, வேறு மொழிகளை என் செவிகள் கேளா, அவன் திருப் பெயர்களைத் தவிர, வேறு பெயர்களை என் நாக்கு நவிலாது. அவன் திருவடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் கண்கள் காணா. அவனைத் தவிர, வேறு எவரையும் கீழே விழுந்து வணங்கேன். அவனுக்குத் தவிர வேறு எவர்க்காகவும் என் இருகைகளும் வணங்கக் குவியா. அவன் அடிகளைத் தவிர, வேறு எவர் அடிகளையும் என் தலை சூடித்தாங்காது. அவன் இறைமொழிக்குத் தவிர, வேறு எம்மொழிக்கும் என் மனம் இடம் தராது - என்றெல்லாம் கவுந்தி புகழ்ந்து போற்றினார்.

இதனாலும் கவுந்தியின் சமயப் பற்று புலனாகும். சாரணர் கூறிய அறிவுரைகளை யெல்லாம் கவுந்தியடிகளும் பிறருக்கு அறிவுறுத்தி யருளினாராம்.

மூவரும் உறையூரினின்றும் புறப்பட்டுச் சென்று வழியில் உள்ள ஓர் இளமரக் காவினுள் தங்கினர். அப்போது மாங்காட்டு மறையவன் எனப்படுபவன் வந்து இவர்கட்குச் சில செய்திகள் தெரிவித்தான். செல்லவேண்டிய வழித்தடம் பற்றியும் அறிவித்தான். புண்ணிய சரவணம், பவ காரணி, இட்ட சித்தி ஆகிய பொய்கைகளில் குளித்தால் இன்னின்ன பயன் கிடைக்கும் என்றெல்லாம் அறிவுறுத்தினான். கேட்ட கவுந்தி மறுத்துரைக்கலானார். மறையவரே! புண்ணிய சரவணத்தில் புகாமலேயே, அருகன் அருளியுள்ள அறநூல்களைக் கொண்டு எல்லாம் தெரிந்து கொள்ளலாம் - பவகாரணியில் மூழ்கித்தான் முற்பிறப்புச் செய்திகளை அறியவேண்டும் என்பது கட்டாயம் இல்லை - இட்ட சித்தியில் குளித்தால் பெறக்கூடிய நன்மைகளை, அறநெறியின் ஒழுகி, மன்னுயிர்களைக் காக்கும் அருட்-