பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

275


மகளாகப் பிறந்த மாதவி கோவலன் ஒருவனையே இறுதி வரையும் கணவனாக வரித்துக் கொண்டவள். கோவலன் இறந்தபிறகு, தன் தாய் சித்திராபதியின் விருப்பப்படி பரத்தமைத் தொழிலில் ஈடுபட மறுத்துவிட்டாள்.

ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடிக்கச் செய்து ஏழாண்டு ஆடல் பாடல் கலைகளிலே பயிற்சி கொடுத்துப் பன்னிரண்டாம் அகவையில் அரசன் முன் ஆடல் செய்வித்த தாய் சித்திராபதியின் கனவுக்குக் கல்லறை கட்டி, இந்த இழிதொழிலே இனிக் கூடாது என்னும் உயர்ந்த கோட்பாட்டைச் சமுதாயத்தில் நிலைநாட்டப் பாடுபட்டவள் மாதவி.

ஒப்புயர்வு அற்ற தன் ஆடலாலும் பாடலாலும் மேனி மினுமினுப்பாலும் கோவலனுக்கு ஊடலும் கூடலும் தந்து உள்ளம் உவக்கச் செய்து வந்த மாதவி, இந்திர விழாவில் ஆடலாலும் பாடலாலும் பொது மக்களை மெய்ம்மறக்கச் செய்ததைப் பொறுக்க முடியாத கோவலனால் முதல் முதலாக நீறு பூத்த நெருப்புப்போல் உள்ளத்துள் வெறுப்பு தோன்றச் செய்தாள்.

ஒரு நாள் கடற்கரைச் சோலையிலே கோவலன் யாழ் மீட்டி, மற்றொருத்தி மீது நாட்டம் உடையவன் போன்ற குறிப்புப் பொருளமைத்து வரிப்பாட்டு இசைத்தான். அவன் அவ்வாறு பாடியது விளையாட்டாகத்தான். அதே போல் மாதவியும் மற்றொருவன்மேல் மனம் கொண்டவள் போன்ற குறிப்புப் பொருளமைத்து விளையாட்டாய் வரிப் பாட்டு இசைத்தாள். இதை உண்மை என எண்ணிய கோவலன், இவள் பரத்தை - பரத்தைதானே என்று இழிவாய்த் தப்புக் கணக்கு செய்து மாதவியைப் பிரிந்து விட்டான்.