பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

சுந்தர சண்முகனார்


தெனில், ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து பெற்ற பசுமணி மாலையும் தொலைந்திருக்கு மல்லவா?

இவ்வளவு செல்வம் எவ்வாறு தொலைந்தன. பிறர்க்குத் தானம் கொடுத்ததனால் மட்டுமா தொலைந்திருக்கும்? மாதவியோடு ஆரவார வாழ்க்கை நடத்தியதினால்தான் தொலைந்திருக்கக் கூடும். மகள் மணிமேகலைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தியபோது மாதவியும் கோவலனும் தானமாகப் பொன்மழை பொழிந்தார்களாம். “மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையின் பொழிய” என்பது பாடல் பகுதி. மாதவி மழையாகப் பொழிவதற்கு யார் வீட்டுப் பொன்னாயிருக்க முடியும்? “சலம் புணர் கொள்கைச் சலதியோடு ஆடி” என்பதில் உள்ள சலதி என்பது மாதவியைக் குறிக்காது எனச் சிலர் கூறுகின்றனர். ‘சலதி’ என ஒருமையில் கூறியிருப்பது மாதவியைத் தவிர வேறு யாரைக் குறிக்க முடியும்?

கோவலனின் மனைவி கண்ணகியை விட்டுத் தன்பால் வந்து தங்கியிருப்பது தகாது - கண்ணகி வருந்துவாள் என்பதும், கோவலனின் பெற்றோரும் மற்றோரும் கோவலனது செய்கையால் வருந்துவர் என்பதும் மாதவிக்குத் தெரியாமலா இருக்கும்? மனைவியை விட்டுத் தன்னிடம் வந்து தங்கியிருப்பது தகாது என்று மாதவி எண்ணியிருந்தால், அவன் அவளை விட்டுப் பிரிந்ததும், வயந்த மாலை என்னும் தோழியின் வாயிலாக, கோவலன் தன்னிடம் வரும்படி வேண்டி மடல் எழுதித் தந்து அனுப்பியிருப்பாளா? கோவலன் மடலை மறுத்து, வயந்த மாலையை விரட்டினதும், “மாலை வாரா ராயினும் காலை காண்குவம்” என்று கூறியிருப்பாளா? பின்னரும் கோசிகன் வாயிலாக மடல் அனுப்பியிருப்பாளா?

இதுகாறும் கூறியவற்றால், கோவலன் வணிகத்தைக் கவனித்துப் பொருள் ஈட்டாமைக்கும் கண்ணகியைப்