பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

283


வரும். உருப்பசி மாதவியாகப் பிறந்த காலத்தில் அந்தக் குடும்பம் நன்றாயிருந்திருக்கலாம். பின்னர்ச் சித்திராபதி காலத்தில் இழிதொழிலில் இறங்கியிருக்கலாம். இதற்குரிய அகச்சான்று, இளங்கோவுக்குக் கண்ணகி வரலாறு கூறிய சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியத்தில் உள்ளது. அப்படியிருந்தும், இளங்கோவடிகள் ‘பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என்று கூறியிருப்பது வியப்பாயுள்ளது. இனி மணிமேகலையில் சென்று பார்க்கலாம்:

சித்திராபதி ஆடல் பாடலுக்காக மாதவியையும் மணிமேகலையையும் அழைத்து வரும்படி மாதவியின் தோழியாகிய வயந்த மாலையை அனுப்பினாள். வயந்தமாலை மாதவியிடம் சென்று வந்த காரணத்தைக் கூறியதும் மாதவி சொல்கிறாள்: என் மகள் மணிமேகலை மாபெரும் பத்தினி. அவள் தவம் மேற்கொள்வதன்றிக் குலத்தொழிலாகிய பொருந்தாத தீய காமத்தீநெறியில் ஈடுபடமாட்டாள் என்றாள். பாடல்:

“மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்” (2:55-57)

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் என்பது, சித்திராபதி குலத்தினர் பின்பற்றி வந்த பரத்தமைத் தொழிலாகும்.

மற்றும் ஓரிடம் வருமாறு:- சோழன் மனைவி இராசமாதேவி தன் மகன் உதயகுமரன் இறந்ததும் மணிமேகலையைச் சிறையில் அடைத்து விட்டாள். சிறை வீடு செய்யும்படி வேண்டுவதற்காக மணிமேகலையின் பாட்டி சித்திராபதி இராசமாதேவியை நோக்கிக் கெஞ்சுகிறாள். அரசியாரே! கோவலன் இறந்ததும் என் மகள் மாதவி பரத்தமைத் தொழில் புரியாமல் துறவு பூண்டுவிட்டாள்,