பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

சுந்தர சண்முகனார்


“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்” (5:200, 201)

“நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆரிடை யுழந்து
சிறுமை யுற்றேன்”

(இது கோவலன் கூற்று - 14:17-20)


“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுங்கை புக்குப்
பொச்சாப் புண்டு பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கும் நன்னெறி உண்டோ”

(16:63-66)

என்னும் பகுதிகள் மீண்டும் எண்ணத் தக்கன.

உலகியலில், நல்ல குடும்பத்தில் பிறந்த கணவனும் மனைவியும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது, கணவன் மனைவியை நோக்கி, நான் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தேன் அவளோடு காதல் தொடர்பு வைத்துக்கொள்ளப்போகிறேன் என விளையாட்டாகச் சொன்னாலுங்கூட, நானும் ஓர் அழகான ஆண்மகனைப் பார்த்தேன் - அவனோடு காதல் தொடர்பு வைத்துக்கொள்ளப் போகிறேன் என்று மனைவி விளையாட்டாகக் கூடச் சொல்வதில்லை. இன்னும் இந்த ஒருதலை நாகரிகம் நம் நாட்டில் உள்ளது. ஆனால், கானல் வரிப் பாடல்களில் நடந்திருப்பது என்ன? வேறொரு பெண்மேல் காதல் உடையவன் போன்ற குறிப்பமைத்துக் கோவலன் விளையாட்டாகப் பாடினான். மாதவியும் வேறோர் ஆடவன்மேல் காதல் உடையவள் போன்ற குறிப்பமைத்துப் பதிலுக்குப் பாடினாள். ஆனால், நற்குடிப் பெண்ணாயின் இவ்வாறு பாடியிருக்கமாட்டாள். கணிகையர் குலத்தில் பிறந்தவளுக்கு எந்தக் கணக்கும் கிடையாது;