பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

291


தற்கொலை செய்து கொண்டாள். சித்திராதேவி கலாவை அருமை பெருமையுடன் வளர்த்து வந்தாள். கலா பெரியவள் ஆனதும், பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்தப் பாட்டி எவ்வளவோ முயன்றாள் - இறுதியாகக் கலா ஈடுபடாமல் ஒருவரை மணஞ்செய்து கொண்டு கற்புடைய பெண்ணாக மனையறம் நடத்தினாள்.

இது யான் எழுதிய கதையின் சுருக்கம். எனது கதையில் வரும் கோதையாகவும் கலாவாகவும் மாதவி நடந்து கொண்டாள். எனவே, மாதவிமேல் குற்றம் இல்லையெனினும், அவள் குலம் பரத்தமைக் குலமே.

மாதவி கடுமையாகத் துறவு பூண்டதற்கு முதன்மையான காரணமாகக் கோவலனும் கண்ணகியும் வேறு சிலரும் முடிவுற்றமை இருக்கலாம். நம்மால்தானே அவர்களின் குடும்ப வாழ்க்கை கெட்டது - வழி நடந்து கடந்து இடர்ப்பட்டு மதுரை அடைந்தனர் - அங்கே நிகழ்ந்த செயலால், கோவலன், பாண்டியன், பாண்டியன்தேவி, கண்ணகி, பொற்கொல்லர் பலர், கோவலன் தாய், கண்ணகியின் தாய் ஆகியோர் இறந்தனர் - மதுரை எரியுண்டது. இவற்றிற்கெல்லாம் நாம்தானே காரணம் என்று மாதவி ஆழ உணர்ந்து எண்ணியதால் கடுமையாகத் துறவு பூண்டாள் - தன் மகளையும் இழிதொழிலில் ஈடுபடுத்தாமல் இளமையிலேயே துறவு பூணச் செய்தாள்.

மற்றும், கோவலன் இறந்த பின்னர், கணிகையர் குலத்தவளாகிய மாதவி, தரக்குறைவான ஆடவர் சிலரின் கழுகுக் கண்களிலிருந்து தப்புவதற்கு உதவும் படைக்கலமுமாகும் அவள் கொண்ட துறவு. அவளது மன உறுதி மெச்சத்தக்கது.

மாதவியின் மதம்

இந்தக் காலத்தில் உறவினர்கட்குள்ளேயே, ஒரு குடும்பத்தினர் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர்