பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

சுந்தர சண்முகனார்


இப்பிறவி கொண்டே உய்த்துணர்ந்து அறியலாம். வாய்மையுடன் ஒழுகின், இட்டசித்தியில் மூழ்காமலேயே எதிர்பார்ப்பதை அடையலாம் என மறையவனுக்கு விடையளித்து அவன் போக விடையளித்தார்.

இளங்கோவடிகள், மாங்காட்டு மறையவனை வைணவ விளம்பரம் செய்ய வைத்து, பின்பு, கவுந்தியடிகளைக் கொண்டு அதைத் தட்டிக் கழிக்கச் செய்து சமணம் பரப்ப இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

3. கோசிகன்

கோசிகன் என்பவன் ஓர் அந்தணன். கோசிக குலத்தில் பிறந்ததால் இவன் கெளசிகன் என்றும் பெயர் வழங்கப்படுகிறான். சிலப்பதிகாரத்தில் கெளசிகனின் பங்கு (Role) சிறியதே. அஞ்சல்காரர் (Post man) வேலையே இவன் செய்திருக்கின்றான். மாதவி கோவலனிடம் சேர்க்குமாறு தந்த மடலை இவன் எடுத்துக்கொண்டு காட்டு வழியில் சென்று கோவலனைத் தேடிக் காண முயன்று கொண்டிருந்தான்.

கோவலன் வழியில் ஒருநாள் காலைக் கடனைக் கழிக்க ஒரு நீர்நிலையின் பாங்கர் சென்றிருந்தான். கெளசிகன் வழிநடந்த களைப்பால் கோவலன் அந்தப் பக்கம் அருகில் இருப்பதை அறியாமல், வாடிய ஒரு மாதவிக் கொடியைக் கண்டு இரங்கி ஏதோ சொன்னான். மாதவி என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டதும் கோவலன் அவனை அணுகி விவரம் கேட்டான். கெளசிகன் பின்வருமாறு நிகழ்ந்தது கூறலானான்:

கோவலனே! நீ ஊரைவிட்டுப் பிரிந்ததும், உன் தாய் தந்தையர் சொல்லொணத் துயர் உழந்தனர். உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கப் பல இடங்கட்கும் ஆட்களை