பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

303


அனுப்பினர். பயன் யாதும் இல்லை. இந்தச் செய்தியை வயந்தமாலை வாயிலாகக் கேள்விப்பட்ட மாதவி மிகவும் வருந்திப் பாயும் படுக்கையுமாய்க் கிடந்தாள். அவளைப் பார்க்கச் சென்ற என்னிடம் இந்த மடலை எழுதித் தந்து, நின்னைத் தேடிக் கண்டு நின்னிடம் சேர்க்கச் சொன்னாள் - என்று கூறி மடலைக் கோவலன் கையில் கொடுத்தான். இதுதான் கெளசிகனின் பங்கு. இவன் மாதவிக் குடும்பத்தின் உதவியாளனாகக் காணப்படுகிறான்.

இந்தப் பகுதியில் உள்ள காப்பியச் சுவையாவது: குருக்கத்தி என்னும் (தாவரக்) கொடிக்கு மாதவி என்ற பெயரும் உண்டு. அந்தப் பெயர்தான் மாதவிக்கு வைக்கப் பெற்றிருந்தது. சில பெண்கட்குச் செந்தாமரை, தில்லை, துளசி, அல்லி, குமுதம், செங்கழுநீர் (செங்கேணி), மருக்கொழுந்து, (வடமொழிப் பெயராகிய) அம்புஜம், பங்கஜம், சரோஜா, வனஜா, கமலம், மல்லிகா (மல்லிகை) முதலிய மலர்ப் பெயர்கள் இடப்பட்டிருப்பதை அறியலாம். மற்றும் சில பெண்கட்கு மாலதி, சண்பகம், காஞ்சனா என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இம்மூன்று பெயர்களும் ஒரே மலருக்கு உரியன. சிலருக்குப் புஷ்பா எனப் பூவின் வடமொழிப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை அறியலாம். இந்தக் காலத்தில் சில பெண்கட்கு 'மலர்' என்னும் தனித் தமிழ்ப் பெயர் இடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, குருக்கத்தியின் மற்றொரு பெயராகிய மாதவி என்னும் பெயர் மாதவிக்கு அக்காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

கெளசிகன் மாதவிக் கொடியின் வாடிய நிலையைக் கண்டு, 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய' வடலூர் இராமலிங்க வள்ளலாரைப் போல் மனம் வாடி உரைத்துள்ளான். அம்மாதவி என்ற பெயரைக் கேட்டதும் கோவலன் கெளசிகனோடு தொடர்பு கொள்ளலானான்.