பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

319


"முன்னே வந்து எதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியில்
தன்னேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னே என்மனம் திரித்த
இவன்யாரோ என நினைத்தார் (290)

என்பது பாடல். இவர் முருகனாக இருப்பாரோ அல்லது, மன்மதனாகவாவது - விஞ்சையனாகவாவது இருப்பாரோ! அல்லது, சிவனடியாராக இருப்பாரோ! என்று பரவையார் வியக்கிறார். இந்தப் பாடல் சைவ சமயச் சூழ்நிலையை அறிவிக்கிறது. இவ்வாறே, மாதரியும் ஐயையும் தம் குலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்றவாறு கற்பனை செய்து பார்த்துள்ளனர். நம்பி = கோவலன். பல்வளைத் தோளி . கண்ணகி, புதுமலர் வண்ணன், தூமணி வண்ணன் = கண்ணன். விளக்கு = நப்பின்னை. வேடிக்கை பார்ப்பது பெண்களின் வழக்கம் போலும்!

நப்பின்னை வரலாறு

மிதிலைப் பக்கத்தில் கும்பகன் என்னும் ஆயர் அரசன் இருந்தான். அவன் மகள் நப்பின்னை. அரக்கர்கள் ஏழு எருமைக் கடாக்களாக வந்து தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தனர். இந்தக் காளைகளை அடக்கிக் கொல்பவருக்குத் தன் மகளை மண முடித்துத் தருவதாகக் கும்பகன் அறிவித்தான். அவ்வாறே கண்ணன் (கிருஷ்ணன்) காளைகளை அடக்கிக் கொன்று நப்பின்னையை மணந்தான். இது தொழுனையாற்றங் கரையில் நடந்தது. இந்த நப்பின்னை போலும் கண்ணகி என ஐயையும் மாதரியும் பூரித்துப் போயினர்.