பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

சுந்தர சண்முகனார்


குல வேற்றுமை

மாதரி அடைக்கலமாகப் பெற்றுக் கொண்டு வந்த கண்ணகி மிகவும் ஒய்ந்து சோர்ந்து இருந்திருப்பாள். இந்த நிலையில் உணவு ஆக்கும் வேலையை அவளிடம் விடலாமா? மாதரியும் ஐயையுமல்லவா உணவு ஆக்கி விருந்து படைத்திருக்க வேண்டும்? உணவு ஆக்குதலைக் கண்ணகியிடமே விட்டிருக்கும் காரணம் என்ன?

ஆயர்குலம் தாழ்ந்த குலம் - வணிகர் குலம் உயர்ந்தது; எனவே, தாழ்ந்த குலத்தினர் ஆக்கியதை உயர் குலத்தினர் உண்ண மாட்டார்கள் - என்பதைத் தவிர வேறு என்ன காரணம் கூறமுடியும்? ஆயர் குலத்தினர் அரிய பெரிய அடைவுகள் (சாதனைகள்) புரியினும் அவற்றை அவர்கள் செய்ததாகக் கொள்ளாமல் வேறு யாரோ செய்ததாக அந்தக் காலத்தில் கூறி வந்தனர். ஓர் இடையன் செய்ததாக நாம் ஒத்துக் கொள்வதா என்னும் தருக்கு உயர் குலத்தினர் எனப்படுபவர்க்கு இருந்தது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காணலாம்:

ஆயர் குலத்தவராகிய திருமூலர் அரிய மூவாயிரம் பாடல் கொண்ட திருமந்திரம் என்னும் நூலை இயற்றினார். ஆனால் உண்மை மறைக்கப்பட்டது. மூலன் என்னும் இடையன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். திடீரென வழியில் விழுந்து இறந்துவிட்டான். மாடுகள் கதறின. கைலாயத்திலிருந்து அவ்வழியே வந்த தவயோகி ஒருவர் இதைக் கண்டு இரக்கமுற்று, கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றலின்படி, தன் உயிரை மூலன் உடம்பில் புகுத்தி எழுந்து, தன் உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மாடுகளை உரிய இடத்தில் கொண்டு சேர்த்தார். பின்னர் தன் உடலைத் தேடினார். இவர் இங்கேயே தங்கித் தொண்டு செய்ய வேண்டும் என்று சிவன் இவர் உடலை