பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

29


ஞாயிறாகிய கணவனை இழத்தல்-காலைக் காட்சி-அந்தி மாலைக் காட்சி-ஞாயிறு திங்கள் புனைவு-கடற்கரைசோலைக் காட்சிகள்-நாடு நகர அரசர் சிறப்புகள்-மணி மேகலை துறவால் நன்மணி கடலில் வீழ்ந்தாற்போல் வருந்துதல்-கற்புடைய மகளிர் தெய்வம் தொழாமை. முதலிய செய்திகள் இரண்டு காப்பியங்களிலும் இடம் பெற்றுள்ளன. விரிப்பின் பெருகும்.

இவ்வளவு ஒற்றுமைத் தொடர்புகள் இருப்பினும், இளங்கோ அடிகள் சமண சமயச்சார்புடையவர் போலவும், சாத்தனார் புத்த சமயச் சார்பினராகவும் தோன்றுதல் வியப்பாயிருக்கலாம். இக்காலத்தில், தந்தையும் மகனும் வெவ்வேறு அரசியல் கட்சியினராகவும், தமையனும் தம்பியும் வெவ்வேறு கட்சியினராகவும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் ஒருவர்க்கொருவர் வெவ்வேறு கட்சியினராகவும் இருப்பினும், பல நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்படுகின்றனர் அன்றோ? அவ்வாறே இளங்கோவையும் சாத்தனாரையும் கருதல் வேண்டும்.

இளங்கோ சாத்தனாரை, ‘தண்தமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூல் புலவன் சாத்தன்’ என்று புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.