பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

333


தெருவில், வண்ணம் சாந்து மலர் கம்மியரின் பொருள் மோதகம் மீன் முதலியன விற்போர் வைத்திருக்கும் விளக்குகளும், கலங்கரை விளக்கமும், பரதவரின் படகு விளக்கு களும் அயல் நாட்டவர் பயன்படுத்தும் விளக்குகளும் காவலர் கையாளும் விளக்குகளும் ஒளி பொழிந்தனவாம்.

புகாரில் கற்பகக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், நாகர் கோட்டம், ஞாயிறு கோட்டம், வேல் கோட்டம், வச்சிரக் கோட்டம், நிக்கந்தர் கோட்டம், நிலாக் கோட்டம், முதலிய கோட்டங்கள் இருந்தன.

புகார் நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கே கடற்கரைப் பக்கமாக இருந்தது மருவூர்ப் பாக்கம் எனவும், மேற்குப் பக்கம் இருந்த மறுபாதி பட்டினப் பாக்கம் எனவும் பெயர் வழங்கப்பட்டன.

மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை வருமாறு: அணிகல மாளிகை, சரக் கறைகள், மிலேச்சர் இருப்பிடம், பிற நாட்டார் இருப்பிடம், தொய்யில்குழம்பு சுண்ணம் சாந்து மலர்கள் ஆரம் அகில் விற்பவர் தெருக்கள், பலவகை உலோகம் மரம் ஆகியவற்றால் பொருள்கள் செய்து உண்டாக்கும் கம்மியர் தெருக்கள், தையல்காரர் . தோல் வேலை புரிபவர் - பூக்கட்டுவோர் தெருக்கள், பல் இயங்கள் கொண்டு பாடும் பாணர் தெரு, ஒழுக்கமற்ற சிறு தொழிலோர் தெரு - முதலிய பகுதிகள் மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை. வாணிகம் என்னும் தலைப்பிலும் பாடலுடன் இச்செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

அடுத்து, பட்டினப் பாக்கத்தில் இருந்தவை: மன்னர், அமைச்சர், படைவீரர், அந்தணர், வணிகர், சூதர், மாகதர், மருத்துவர், சோதிடர், முத்துக் கோப்பவர், சங்கு அறுப்பவர், நாழிகை அறிவிப்பவர், படைத் தலைவர்கள், கூத்தர், பதியிலார், நகை வேழம்பர், திருவிழா முழவு கொட்டுவோர்