பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29. சிறப்பான சுவைச் செய்திகள்

சிலம்பில் இடம் பெற்றுள்ள சிறப்பானவையும் சுவை மிக்கனவுமாகிய செய்திகளுள் சிலவற்றை இந்தத் தலைப்பில் காதை வாரியாகக் காண்பாம்:

மங்கல வாழ்த்துப் பாடல்

திருமண அழைப்பு

அரை நூற்றாண்டுக்கு முன்பு பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் நடைபெறின் அழைப்பிதழ் அச்சிடுவதில்லை. யான் சிறுவனாயிருந்தபோது, வீட்டுக்கு வீடு சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுத்ததையே பார்த்திருக்கிறேன். வெளியூர் உறவினர்க்கும் நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து வாயால் அழைப்பு விடுப்பர்.

இப்போது, மிகப்பெருஞ் செலவில் (காசுக் கொழுப்பால்) அழைப்பிதழ் அச்சடிக்கப்படுகிறது. இருவீட்டார் அழைப்பு - மங்கையர் அழைப்பு - முதலியன அச்சடிக்கப்படும். சிலர் செய்தித் தாள்களில் திருமண விளம்பரம் செய்து இதையே அழைப்பாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவது முண்டு. இப்போது பெரிய இடத்துத் திருமண அழைப்பிதழுக்கு ஆகும் பணச் செலவில் அன்று என் பாட்டனாரின் திருமணம் நடைபெற்றிருக்கும்.

புகாரில் அன்று கண்ணகியின் தந்தை குடும்பமும் கோவலனின் தந்தை குடும்பமும் மிகவும் பெரிய இடமாகும். எனவே, அவர்கள், கண்ணகி - கோவலன் திருமணத்தை யானையின் முதுகில் பெண்களை ஏற்றிப்