பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

365



“இகலென்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்”
(853)

என்னும் குறளிலுள்ள ‘விளக்கம்’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் ‘புகழ்’ என்னும் பொருளே தந்துள்ளனர்.

வெள்ளைக் கொடிகள், புகழ் போலவும் வெண்மையான அலை போலவும் பரந்து பறந்தன எனக் கம்ப இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

“தானை மாக்கொடி... புகழ்எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரை என வரம்பில பரந்த”
(5-9-7)


என்பது பாடல் பகுதி. மற்றும், நிலவின் வெள் ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியது போல் இருந்ததாம்.

“அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே”
(5-1-65)

இது கம்பரின் பாடல் பகுதி. கம்பரே இன்னும் இதுபோல் வேறிடங்களிலும் கூறியுள்ளார். இன்னும் ஒன்று கூறி முடித்து விடலாம். சிவனது புகழ் திரண்டது போன்று வெள்ளைக் கைலை மலை இருந்தது எனப் பிரபுலிங்கலீலை என்னும் நூலில் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்:-

“வள்ளல் வெண் புகழ் திரண்ட வளங்கெழு
கைலைக் குன்று”
(2-4)

என்பது பாடல் பகுதி.

கோவலன் இழப்பு

கோவலன் கண்ணகியைப் பிரிந்து விட்டதால், அவளுடைய கால்கள் சிலம்புகளையும், அல்குல் மேகலையையும், கொங்கை குங்குமச் சாந்து எழுதுதலையும், காது குழையையும் மங்கல நாணைத் (தாலியைத்) தவிர மற்ற