பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

33


பெரியோர்களையோ, வள்ளல்களையோ சிறு பிள்ளையாகக் கொண்டு அவர்கள் மேல் பத்துப் பருவங்கள் அமைத்து, ஒரு பருவத்துக்குப் பத்துப் பாக்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்கள் தமிழில் பாடும் நூலுக்குப் பிள்ளைத் தமிழ் என்பது பெயராம். பல கடவுளர்க்குப் பிள்ளைத் தமிழ் பாடப் பெற்றுள்ளது. சிவனுக்கு மட்டும் பிள்ளைத் தமிழ் நூல் இல்லை. சிவன் பிள்ளையாகப் பிறக்காததனால் அவர் மேல் யாரும் பிள்ளைத் தமிழ் பாடவில்லை. இந்த மரபை ஒட்டிச் சிவனைப் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

அறு முகச் செவ்வேள் = முருகன். வெண் சங்கு போன்ற வெண்மேனி உடைய கடவுள் பல தேவன். நீல மேனி நெடியோன் = திருமால். மாலை வெண் குடை மன்னவன் இந்திரன்.

இந்திரனை மட்டும் ‘மன்னவன்’ என்று கூறியிருப்பது தொல்காப்பிய மரபை ஒட்டியதாகும். தொல்காப்பியர் அகத்திணையியலில், முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தல் என்னும் நிலங்கட்கு உரிய தெய்வங்களைப் பின்வருமாறு கூறியுள்ளார்:

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன்மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (5)

என்பது நூற்பா. முதலது முல்லை - திருமால். அடுத்தது குறிஞ்சி - முருகன். மூன்றாவது மருதம் - இந்திரன். நான்காவது நெய்தல் - வருணன்.