பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

சுந்தர சண்முகனார்


உறுப்புகள் மற்ற அணிகலன்களையும், முகம் சிறு வியர்வையையும், கண் மையையும், நெற்றி பொட்டையும், வெண்மையான ஒளி பொருந்திய பற்களிலிருந்து வெளிப்படும் சிரிப்பு கோவலனையும், கூந்தல் நெய்யணியையும் இழந்து விட்டனவாம்.

"அஞ்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்துதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (4:47-57)

என்னும் பகுதி சுவை மிக்கது. அதை அதை அணியவில்லை என்று கூறியதோடு, இது இது இன்னின்னதை இழந்துவிட்டதாகவும் கூறியிருப்பது ஒரு புது முறை, ஒரே பொருளில் ஒழிய, நீங்க, இரிய, மறப்ப, இழப்ப என்னும் சொற்களை மாறி மாறிக் கையாண்டிருப்பதும் ஒரு சுவை. புணர்ச்சி இன்மையால் முகம் வியர்வையை இழந்ததாம்.

அடி முதலாய்த் தொடங்கி முடிவரை சொல்லிக் கொண்டு போவதைப் 'பாதாதி கேசம்' எனவும், முடி முதலாய்த் தொடங்கி அடிவரை சொல்லிக் கொண்டு போவதைக் 'கேசாதி (கேச + ஆதி) பாதம்' எனவும் வட மொழியில் கூறுவர். தமிழில், 'அடி முதல் முடி' எனவும், ‘முடி முதல் அடி எனவும் கூறலாம். இந்த இடத்தில் இளங்கோ அடி முதல் முடி முறையைக் கையாண்டுள்ளார்.