பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

367



'அஞ் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய' என்று தொடங்கி, 'மை யிருங் கூந்தல் நெய்யணி மறப்ப' என்று முடித்துள்ளார். இந்த முறை இந்நூலுக்கு மிகவும் பொருத்தமாகும். சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரத்தில 'சிலம்பு ஒழிய' எனச் சிலம்புக்கு முதலிடம் தந்திருப்பது மிக்க சுவை பயக்கிறது.

'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்பதற்கு, சிரிப்பு கோவலனை இழந்ததாக யான் பொருள் கூறியுள்ளேன். மற்ற அமைப்புகளை நோக்கின், அவை போல இவ்வாறு கூறுவதுதான் பொருத்தம் என்பது தெளிவாகும். ஆனால், கோவலன் கண்ணகியின் சிரிப்பை இழந்து விட்ட தாக உரையாசிரியர்கள் பொருள் செய்துள்ளனர். மற்ற அமைப்புகளை நோக்க இது பொருந்தாது கருத்தின் நயமான சிறப்பும் கெட்டுப்போகும். சிரிப்பு கோவலன் முன்னால் மட்டுமே நிகழும் . இப்போது கோவலன் இல்லாததால் சிரிப்பே இல்லை - எனவே தான், சிரிப்பு கோவலனை இழந்தது - சிரிப்புக்கு வேலையே இல்லை - எனக் கூறுதலே பொருந்தும். மாதவியைப் பிரிந்து கோவலன் மீண்டும் கண்ணகியை அடைந்ததும், அவனைக் கண்டு கண்ணகி சிரித்ததாகக் கூறியுள்ள பகுதி ஈண்டு நினைவுக்கு வரவேண்டும்.

"நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி" (9:72)

என்பது அந்தப் பகுதி. .

இந்தப் பகுதியில், ஒரு சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் உள்ள 'அகலுள் மங்கல அணி எழுந்தது' என்னும் பகுதிக்கு, 'மங்கல அணி எங்கும் எழுந்தது' என அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார். அடியார்க்கு எல்லாம் நல்லவராயிற்றே - அவர் மீது குறை சொல்லக் கூடாதுதான்.