பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

சுந்தர சண்முகனார்



ஆனால் இந்த விளக்கம் தெளிவாய் இல்லையே. இதற்கு, ஊரில் மங்கல நாண் வலம் வந்தது என்பது சிலர் கூறும் பொருள். கோவலன் கண்ணகி கழுத்தில் தாலி கட்டினானாஇல்லையா என்பது ஓர் ஆராய்ச்சி. அடியார்க்கு நல்லாரின் உரையைக் கொண்டு, தாலி கட்டவில்லை என்பர் சிலர். மற்ற ஒர் உரையைக் கொண்டு தாலி கட்டினான் என்பர் சிலர். இவ்விரண்டனுள் பின்னதே பொருத்தமானது. இதற்கு அகச்சான்று, மேலே காட்டியுள்ள

"மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்" (4:50)

என்பது தான். தாலியைத் தவிர வேறு அணி அணியவில்லையாம். தாலி எப்போதும் இருப்பதாயிற்றே!

மற்றும் ஒர் அகச்சான்று வருமாறு:- மனையறம் படுத்த காதையில் - கோவலன் கண்ணகியைப் பின்வருமாறு பாராட்டுகிறான். மணமலர் அணிந்த கண்ணகியே! உன்னை அணி செய்கின்ற (அலங்கரிக்கின்ற) தோழியர், உனக்கு மங்கல அணி (தாலி) இருக்கும்போது வேறு அணிகலன் களையும் அணிவது எதற்காகவாம்? பாடல்.

"நறுமலர்க் கோதை கின்கலம் பாராட்டுநர்
மறுவில் மங்கல அணியே அன்றியும்

பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்" (2:62-64)

என்பது பாடல் பகுதி. இதனாலும் தாலி கட்டிய உண்மை தெளிவாகும்.

இந்திர விழவூர் எடுத்த காதையில், இந்திரவிழாவின் போது தெருவில் திரியும் பொது மகளிரைப் பற்றி இளங்கோ அடிகள் செய்துள்ள கற்பனைப் புனைவு சுவை நயம் மிக்கது. பாடலைப் படித்துப் பார்க்கவேண்டும். ஈண்டு விரிப்பின் பெருகும்.