பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31. சில சிக்கல் தீர்வுகள்

ஒரு வரலாற்றைக் காப்பியமாக எழுதும் போது, ஆண்டு, திங்கள், நாள், நேரம் (மணி) ஆகியவை வாரியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக வரலாற்றில் காண்பதுபோல் காப்பியத்தில் - அதிலும் பழைய காப்பியத்தில் எதிர்பார்க்க வியலாது. காப்பியத்தில், ஞாயிறு திங்கள்களின் தோற்றம் மறைவு, வேனில் கார் - பனிப்பெரும் பருவங்கள், எங்கோ இரண்டொரு திங்கள் (மாதம்), வைகறை - காலை - நண்பகல் - மாலை - இரவு - நள்ளிரவு என்னும் சிறு பருவப் பொழுதுகள் ஆகியவற்றுள் சிலவே, நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நாள் குறிப்பு (டைரி) போல் காப்பியத்தைக் கருதலாகாது. இந்த அடிப்படையுடன் சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு வருவோம். சில சிக்கல்களைத் தீர்ப்போம்:

1. கால முரண்

சிலம்பில் ‘கால முரண்’ இருப்பதாக அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். இது ஒரு சிக்கல். இதன் விவரமாவது:- கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் மதுரையின் புறஞ்சேரியில் வந்து தங்கினர். ஒரு நாள் காலையில் கோவலன் மதுரையைச் சுற்றிப்பார்த்து விட்டுப் புறஞ்சேரி வந்து சேர்ந்தான். இது கிட்டத்தட்ட நண்பகல் நேரத்திற்குச் சிறிது முன்னதாக இருக்கலாம். அப்போது அவ்வழியாக வந்த ஆய்ச்சியாம் மாதரியிடம் கவுந்தி கண்ணகியைக் கோவலனுடன் அடைக்கலமாகத் தந்தார்.

மாதரி இருவரையும் அழைத்துக்கொண்டு தன் இருப்பிடம் சேர்ந்தாள். கண்ணகியை நீராட்டி மங்கலப்