பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

401


படுத்தினாள். கோவலன் பொழுதோடு உண்ணும் சாவக நோன்பிச் சமயத்தைச் (சமணத்தைச்) சேர்ந்தவனாதலின் உணவு ஆக்குவதற்கு வேண்டியவற்றைக் கண்ணகியிடம் விரைந்து கொடுக்குமாறு தம்மவர்க்குப் பணித்தாள். அவ்வாறு கொடுக்கப்பட்டதும் கண்ணகி விரைந்து உணவாக்கிக் கோவலனை உண்பித்தாள் - வெற்றிலை பாக்கும் தந்தாள்.

உணவு உட்கொண்ட கோவலன் கண்ணகியை நோக்கித் தன் பழைய தவறுகளைக் கூறி வருந்தி, அவளைத் தழுவி, கண்ணீரை மறைத்துக் கொண்டு ஒரு சிலம்பைப் பெற்று விற்றுவர மதுரைக் கடைத்தெருவிற்குச் சென்றான். அங்கே பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலையுண்டான். இது நடந்தது மாலை நேரம் அல்லது முன்னிரவு 7 மணியாய் இருக்கலாம் என்பது சிலரது கருத்து. இந்தச் செய்தி கொலைக்களக் காதையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இளங்கோ நேரம் எதையும் இந்தக் காதையில் குறிப்பிடவில்லை. அவன் சாவக நோன்பியாதலின் பொழுதோடு உண்டு உடனே கடைத்தெருவுக்குச் சென்றான், என்பதைக் கொண்டு, இது நடந்த நேரம் மாலையாய் இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர் போலும்!

பின்னர் ஊர்சூழ்வரி என்னும் காதையில் இளங்கோ தெளிவாக நேரம் குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை அறிவித்துள்ளார். அதாவது, இருளை ஊட்டி ஞாயிறு மறைய ஒளி மயக்க நேரமாகிய மாலை வந்தது. அம்மாலை நேரத்தில் சிலர் காட்டக் கோவலனின் உயிரற்ற உடலைக் கண்ணகி கண்டாள். கோவலனது தலை முடியில் இருந்த மாலையைப் பெற்றுத் தன் கூந்தலில் காலையில் சூடிக்கொண்ட கண்ணகி, அன்று மாலையில், கோவலனது உடலைக் குருதிக் கறை படியத் தழுவிப் புலம்பினாள் - என இளங்கோ அடிகள் பாடியுள்ளார். பாடல் பகுதி வருமாறு: