பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

403


என்பதை ஒத்துக்கொண்டதாக எழுதியுள்ளார்; மேலும், கோவலன் கொலையும் குரவைக் கூத்தும் ஒரேநாளில் நடைபெற்றதாக மொ. துரை அரங்கனார் அவர்கள் கூறியிருப்பது தவறு என்றும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். காலையில் கணவனைத் தழுவி வந்தவள் அன்று மாலையே அவனது பிணத்தைக் கண்டதாக ஊர்சூழ்வரிக் காதையில் அடிகள் எழுதியிருப்பதே பொருத்தமானது என்பதே அடியேனது (சு.ச.) கருத்துமாகும். கால முரண் உள்ளதாக சீராமுலு ரெட்டியாரும் சகந்நாத ராசாவும் கூறியிருப்பதை வ.சுப.மா., தெ. பொ. மீ., ம. பொ. சி. ஆகியோரும் ஏற்றுக் கொண்டு பின்னர் அதற்கு அமைதி கூற முயன்றிருப்பது வியப்பாயுள்ளது.

தவறான நாள் குறிப்பு

வீரபத்திரன் இது பற்றி ஒரு நாள் குறிப்பைக் கற்பனையாகப் பின்வருமாறு தந்துள்ளார்:

கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்த்துப் புறஞ்சேரிக்கு மீண்டது முதல் நாள் நண்பகல் 15 நாழிகை - (ஒரு 12 மணி). மாதரி அடைக்கலமாய் அழைத்துச் சென்றது பகல் 22½ நாழிகை (பிற்பகல் 3 மணி). கோவலன் உணவு உண்டு சிலம்பு விற்கப் புறப்பட்டது 27½ நாழிகை (பிற்பகல் 5 மணி). கோவலன் கொலையுண்டது சுமார் 32½ நாழிகை. (முன்னிரவு 7 மணி சமயம்). குரவைக் கூத்து நிகழ்ந்தது மறுநாள் (இரண்டாம் நாள்) காலை 7½ நாழிகை முதல் 12½ நாழிகை வரை (மணி 9 முதல் 11 வரை). மாதரி வைகையில் நீராடி வழியில் கேள்விப்பட்ட கோவலன் கொலையைக் கண்ணகிக்கு உரைத்தது அந்த இரண்டாம் நாள் நண்பகல் 15 நாழிகை (12 மணி) வேளை. கண்ணகி கோவலனது உடலைக் கண்டது அந்த இரண்டாம் நாள் 30 நாழிகை (பிற்பகல் 6 மணி) வேளை. (அதாவது மாலை).