பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

37


யிருப்பின், அதன் தொடக்கத்தில் சிவனைக் குறிப்பிட்டிருக்கலாம்.

இப்பெயர்கட் கிடையே ‘சிவகதி நாயகன்’ என்னும் பெயர் ஒன்றும் உள்ளது. சிவகதி என்பது வீடுபேறு. சைனர்களும் வீடு பேற்றைச் சிவகதி என வழங்குவது எண்ணத்தக்கது.

இதன் பின்னர்க் கவுந்தியடிகளும் அருகன் பெயர்களைக் கூறிப்போற்றினர் அவர் குறிப்பிட்ட பெயர்களாவன:-

“ஒரு மூன்று அவித்தோன், காமனை வென்றோன், ஐவரை வென்றோன், அருளறம் பூண்டோன், அருகர் அறவன், அறிவோன், மலர்மிசை நடந்தோன், இறுதியில் இன்பத்து இறை என்பன. இவற்றுள் ஒன்றாய மலர்மிசை நடந்தோன் என்னும் பெயர், திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள ‘மலர்மிசை ஏகினான்’ என்னும் பெயரை நினைவுறுத்துகிறது.

சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகவன், இறைவன், எண் குணன், மலர்மிசை நடந்தோன், ஐவரை வென்றோன், (பொறிவாயில் ஐந்தவித்தான்), அறவன் (அறவாழி) என்னும் பெயர்களைக் கொண்டு, திருவள்ளுவரைச் சமணர் என்று கூறுவாரும் உளர். இஃது இருக்கட்டும். நாம் திருவள்ளுவரை எல்லாச் சமயத்திற்கும் எல்லா மதங்கட்கும் பொதுவானவர் என்றே கூறுவோமாக திருக்குறளைப் பொதுமறை என்றே எண்ணி ஓதுவோமாக!

காடு காண் காதை

அருக வணக்கம்

இந்தப் பகுதியின் தொடக்கத்தில், அசோக மரத்தின் கீழ் அமர்ந்த அருகதேவனைத் தொழுத செய்தி கூறப்பட்டுள்ளது.