பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

சுந்தர சண்முகனார்


கோவலனிடமிருந்து வாங்கிக் கண்ணகி சூடிக் கொண்டதாகவே, அடியார்க்கு நல்லாரும் வேங்கடசாமி நாட்டாரும் உரையெழுதியுள்ளனர். கோவலன் மாலை தந்தானோ - இல்லையோ! அந்தக் காலை நேரத்தில் மாலை இருந்ததோ இல்லையோ! மங்கலமான சூழ்நிலையில் காலையில் புறப்பட்ட கோவலனைக் கண்ணகி மாலையில் பிணமாகக் கண்டாள் என்று கூறிப் படிப்பவர்க்கு அழுகைச் (அவலச்) சுவையுணர்வை ஊட்டுவதற்காக இளங்கோ அடிகள் கையாண்ட ஒருவகைக் காப்பிய உத்தியாக இது இருக்கக் கூடாதா?

மற்றும், காலையில் கணவனைத் தழுவிய கண்ணகி மாலையில் அவனது பிணத்தைக் கண்டாள் என்றால், காலைக்கும் மாலைக்கும் இடையில் - நண்பகல் அளவில் கொலை நடந்திருக்கலாமே. உண்மை இவ்வாறிருக்க, நேற்று மாலை இறந்தவனை இன்று மாலை தழுவினாள் என்பது எவ்வாறு பொருந்தும்? இருபத்து நான்கு மணி நேரம் பிணம் அங்கேயே கிடந்ததா? இது அரசியல் ஒறுப்பு (தண்டனை) ஆயிற்றே. அவ்வளவு நேரம் பிணம் கிடக்க அரசு விட்டிருக்காதே. காலையில் மங்கலமான சூழ்நிலையை அடிகள் படைத்திருப்பது ஒருவகைக் காப்பிய முன்னோட்டச் சுவையாகும்.

மற்றும் நேற்று மாலை இறந்தான் - இன்று (மறுநாள்) மாலை கண்டாள் என்றால், ‘காலைவாய் - மாலைவாய்’ என்னும் சொற்களைப் போடாமல், நேற்று - இன்று என்னும் சொற்களை இளங்கோ அடிகள் பெய்திருக்க வேண்டுமே! வள்ளுவனார்,

“நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”
(336)