பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

சுந்தர சண்முகனார்


இளங்கோவடிகளின் புகழையும் நிலைநிறுத்த அறிஞர் வீரபத்திரன் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. அவருக்கு நன்றி-வணக்கம்.

2. கோவலனது மதுரைச் செலவு

அடுத்த சிக்கல் கோவலன் மதுரைக்குச் சென்றது ஏன்? என்பது பற்றியது. மாதவி எப்படியும் தன்னை மயக்கி மீண்டும் வரவழைத்துக் கொள்வாள் - நாம் இங்கிருந்தால் மீண்டும் மாதவியிடம் போய்விட்டாலும் போய்விடக் கூடும் - எனவே இங்கிருந்து உடனடியாக மதுரைக்குப் போய்விடவேண்டும் - என்று கருதிக் கோவலன் மதுரைக்குச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர். இது பொருந்தாது.

இந்தக் காலத்தில் திரைப்பட நடிகையர் சிலர் திருமணம் ஆனதும் நடிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் திருமணமாகியும் கணவருடன் இருந்து கொண்டே நடிப்பைத் தொடர்கின்றனர். சிலர் திருமணம் ஆகிச் சில்லாண்டுகள் ஆனதும் கணவனை மாற்றுகின்றனர். இந்த மூவகைத் தரத்தினருள் மாதவி எத்தரத்தைச் சேர்ந்தவள் போன்றவள்? .

மாதவி, இம்மூவருள் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவள் போல ஒரு நேரம் நடந்து கொண்டாள். கோவலனோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்த போதே, புகாரில் நடை பெற்ற இந்திரவிழாவில் ஆடல் பாடல் நிகழ்த்தி அனைவரையும் அகமகிழச் செய்துள்ளாள். இது கோவலனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அவனது மனப்புண்ணை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல், வேறொருவனை உள்ளத்தில் கொண்டு பாடும் குறிப்புப் பொருந்திய மாதவியின் கானல் வரிப்பாட்டு மிகுதியாக்கியது. இதனால் கோவலன் மிகவும் நொந்து மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சென்றான் என்பதே உண்மை.