பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

சுந்தர சண்முகனார்


கூறியிருக்கக் கூடாதா? அல்லது, யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகப் பாடியிருக்கக் கூடாதா? வேசியர் தெருக்களில் நீண்டநேரம் சுற்றியதாகக் கற்பனை செய்து கொள்வதனால் தான் இவன் காம விருப்பினன் என்பது தெரியுமா? இதற்கு முன்பே இவனது கணிப்பு (சாதகம்) தெரிந்தது தானே?

காரணம் - 2: மதுரைக்குச் சென்ற வழியில் (வனசாரினியாகிய) தெய்வப் பெண்ணொருத்தி கோவலனைப் புணர விரும்பி வயந்த மாலை வடிவில் வந்தாள். கோவலனுக்கும் வயந்த மாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததனால்தான், வயந்த மாலை வடிவில் சென்றால் கோவலன் மறுக்கமாட்டான் என நம்பி அவள் வயந்த மாலை வடிவில் வந்தாள்.

மறுப்பு

ஒரு பெரியவருடன் தொடர்பு கொள்ள வந்த புதியவர் ஒருவர், பெரியவரின் உறவினர் . நண்பர் - பெரியவருடன் தொடர்புடையவர் ஆகியோருள் ஒருவரது பெயரைச் சொல்லி அவரோடு தமக்கு உள்ள தொடர்பைக் கூறிக்கொண்டு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு வகை உலகியல். அல்லது, அவ்வேண்டியவரையே பரிந்துரைக்கு உடன் அழைத்துக் கொண்டு செல்வதும் உண்டு. இங்கே தெய்வப்பெண், கோவலனுக்கு அறிமுகமான வயந்த மாலை வடிவில் வந்து தொடர்புகொள்ள முயன்றது, மேற்சொன்ன உலகியல் போன்றதே. கோவலன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பினும், காப்பியத்தைப் படிக்கும் நமக்கு அறிமுகமான வயந்த மாலை என்னும் பெயருடையவளின் வடிவில் வந்தாள் என்று கூறினால் தான் காப்பியக் கதைச் செலவு சுவைக்கும் என்று, இளங்கோவடிகள், வயந்த மாலை வடிவில்