பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

421


வந்ததாகக் கூறியிருக்கலாம் அல்லவா? (முற்றும் துறந்த) மாதவி வடிவில் வந்தால் கோவலன் ஏற்றுக் கொள்ளான் என்பது அப்பெண்ணுக்குத் தெரிந்திருக்கும். முன்பின் அறியாத ஒரு பெண் வடிவில்வரின், கோவலன் துணிந்து புணரான் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கும்.

காரணம்-3: தெய்வப்பெண்ணின் வருகையைப் பற்றி அறிவிக்கும் பாடல் பகுதி:

“கானுறை தெய்வம் காதலின் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயங்த மாலை வடிவில் தோன்றி”
(11:171-173)

என்பதாகும். இங்கே, ‘நயந்த காதலின்’ என்னும் தொடரில் உள்ள ‘நயந்த’ என்பது இறந்த காலப் பெயரெச்சம். இது, கோவலன் முன்னமேயே வயந்த மாலையை நயந்து (விரும்பிக்) காதல் கொண்டுள்ளான் என்பதை அறிவிக்கும். எனவே, கானல் வரியில் சுட்டப்படுபவள் வயந்த மாலையே.

மறுப்பு

‘நயந்த காதலின்’ என்பதற்கு, ‘நயந்த காதல் உடையனாதலால்’ எனப் பொதுவாக அரும்பத உரைகாரரும், ‘மாதவி மேல் நயந்த காதலால்’ என அடியார்க்கு நல்லாரும், ‘மாதவி யிடத்து விரும்பிய காதலினால்’ என வேங்கடசாமி நாட்டாரும் உரை வரைந்துள்ளனர். இந்த மூன்று உரைகளுமே இங்கே வேண்டா. கோவலன் நம்மைக் காதலோடு (காதலின்) ஏற்றுக் கொள்வான் - அதிலும் - மிகவும் விரும்பிய (நயந்த) காதலோடு ஏற்றுக் கொள்வான் எனத் தெய்வ மங்கை எண்ணியதாகக் கருத்து கொள்ளலாகாதா? காதலின் அழுத்தத்தை - உறுதியை ‘நயந்த’ என்பது அறிவிப்பதாகக் கொள்ளலாமே. எனவே, வயந்தமாலையை முன்பு விரும்பியிருந்த காதலினால் ஏற்றுக் கொள்வான் . எனப் பொருள் கொள்ள வேண்டியதில்லையே.